ரசாயனம் கலந்த பட்டாணி பறிமுதல்
தங்கவயல்: ரசாயன வண்ணம் கலந்து விற்பனை செய்த பச்சைப் பட்டாணியை உணவுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எச்சரித்தனர்.ராபர்ட்சன்பேட்டை எம்.ஜி., மார்க்கெட்டின் காய்கறிகள் கடைகளில் உணவுத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பச்சை வண்ண ரசாயனம் கலந்த பட்டாணியை விற்பனை செய்வதை பார்த்தனர்.உரித்த பச்சைப் பட்டாணியா அல்லது பச்சை வண்ண ரசாயன பொடியை கரைத்து ஏமாற்று வேலையா; எங்கிருந்து வருகிறது என, அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. செயற்கையாக பச்சை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட பட்டாணியை பறிமுதல் செய்தனர்.ஏற்கனவே, உணவுப் பொருட்களில் ரசாயன கலவைகளை பயன்படுத்த கூடாது என்ற விதியை சுட்டிக் காண்பித்தனர்.ரசாயனம் கலந்த சிக்கன் கபாப், இனிப்பு பலகாரங்கள், கோபி மஞ்சூரியன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.