உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம் உயிரை பணயம் வைத்து தோணியில் சென்று வரும் மக்கள்

முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம் உயிரை பணயம் வைத்து தோணியில் சென்று வரும் மக்கள்

பெங்களூரு: 'மழைக்கு முழுமையாக சேதம் அடைந்த, வீடுகளுக்கு 1.20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழல் உள்ளிட்ட காரணங்களால் கர்நாடகாவின் கடலோர, மலைநாடு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக, கனமழை பெய்து வருகிறது.இந்த மழையால் தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, உத்தர கன்னடா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வீடுகள் சேதம் அடைந்துள்ளன. விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.மங்களூரில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகளில் வசிப்போர் எங்கு வசிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். தங்களுக்கு அரசு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவப்பு கொடி

உடுப்பி பைந்துாரில் கனமழையால் சவுபர்ணியா ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள நடுபடகோனே கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த கிராம மக்கள் கடைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொருட்களை வாங்க உயிரை பணயம் வைத்து, தோணியில் சென்று வருகின்றனர்.மரவந்தே என்ற இடத்தில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட பாக்கு பயிர்கள் அழுகி உள்ளன. உடுப்பி, தட்சிண கன்னடாவில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது. தண்ணீர்பாவி கடற்கரையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளது. யாரும் கடலுக்குள் இறக்கி விடாமல் தடுக்க, கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று கடலோர, மலைநாடு மாவட்டங்களில் சாரல் மழை பெய்தது.

சிறிய சேதம்

இந்நிலையில் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு இழப்பீட்டை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளது. கனமழை, வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளுக்கு மாவட்ட கலெக்டர்களின் நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும். முழுமையாக சேதம் அடைந்த வீட்டிற்கு 1.20 லட்சம் ரூபாய் இழப்பீடு. தேவராஜ் அர்ஸ் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்படும். வீட்டின் சுவர் இடிந்து விழுந்தால், மேற்கூரை சேதத்திற்கு 50,000 ரூபாய். வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டால் 25,000 ரூபாய். மிக சிறிய சேதங்களுக்கு 6,500 ரூபாய்.வீட்டின் சேத அளவை கிராம நிர்வாக, பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகள் சரியாக கணக்கிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதம் அடைந்த வீட்டின் விபரம், புகைப்படம், பாதிக்கப்பட்டவரின் ஆதார் எண் போன்றவற்றை மென்பொருளில் பதிவு செய்ய, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் இழப்பீடு கோரி, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகற்றப்படாத மணல் குவியல்

உத்தர கன்னடா அங்கோலா அருகே ஷிரூரில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால், ஜூலை 16ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள், ஹோட்டல்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு கங்கவள்ளி ஆற்றில் விழுந்தன. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.ஆற்றின் நடுப்பகுதி வரை மணல், பாறை கற்கள் குவியல் காணப்பட்டன. இவை இன்னும் அகற்றப்படவில்லை. தற்போதைய கனமழையால் ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மீண்டும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் இருப்பதாக ஷிரூர் கிராம மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

rain 1

ஆபத்தான முறையில் தோணியில் பயணம் செய்த குடும்பத்தினர். இடம்: நடுபடகோனே கிராமம், பைந்துார், உடுப்பி.rain 2காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ககனசுக்கி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீர். இடம்: சிவனசமுத்திரா, மாண்டியா.rain 3பாகமண்டலாவை சூழ்ந்த வெள்ளம். இடம்: குடகு.rain 4கங்கவள்ளி ஆற்றின் நடுப்பகுதியில் மண், கற்கள் குவியல் தேங்கி உள்ளது. இடம்: ஷிரூர், கார்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை