உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மஞ்சுவிரட்டுக்கு அனுமதி: நிர்வாகம் மறுப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிருப்தி

மஞ்சுவிரட்டுக்கு அனுமதி: நிர்வாகம் மறுப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிருப்தி

ஹாவேரி: கர்நாடக வட மாவட்டங்களின், பிரபலமான விளையாட்டான மஞ்சு விரட்டுக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், ஏற்பாட்டாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஹாவேரி மாவட்டத்தில், தீபாவளி முடிந்த பின், மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்வது வழக்கம். இது கர்நாடகாவின் வட மாவட்டங்களின், மிகவும் பிரசித்தி பெற்றது. இம்முறையும் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம், ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் சில மாவட்டங்களில் இத்தகைய விளையாட்டுகள் நடத்தி, அசம்பாவிதம் நேர்ந்ததால் அனுமதி அளிக்க, ஹாவேரி மாவட்ட நிர்வாகம் மறுத்தது. இந்த போட்டி நடத்த வேண்டுமானால், கடுமையான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, அறிவுறுத்தியது. இதுகுறித்து, ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யும் சங்கத்தின் தலைவர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது: கர்நாடகாவில் 'கம்பாலா' ஏற்பாடு செய்ய, மாநில அரசு நிதியுதவி வழங்குகிறது. தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு, அம்மாநில அரசு ஊக்கமளிக்கிறது. ஆனால் கர்நாடகாவின் வட மாவட்ட கிராமிய விளையாட்டான மஞ்சு விரட்டுக்கு, அரசு ஏன் ஊக்கம் அளிக்கவில்லை? மாவட்ட நிர்வாகம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது. காளைகளை விரட்டி விளையாடும் விளையாட்டில் மட்டும், உயிரிழப்புகள் நடப்பது இல்லை. பல காரணங்களால் நேர்கின்றன. வெளியே செல்லும் நாம், உயிரோடு வீட்டுக்கு திரும்புவோம் என்பதற்கு, என்ன உத்தரவாதம்? விபத்துகள் நடக்கின்றன. விமானங்களும் விபத்துக்குள்ளாகின்றன. அதற்காக பைக், விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? போட்டி என்றால் அசம்பாவிதங்களும் இருக்கும். இதை தடுக்க என்ன நிபந்தனை விதிக்க வேண்டுமோ, அதை விதிக்கட்டும். அதை விடுத்து கால்நடை டாக்டர்களின் சான்றிதழ் பெற வேண்டும் என்றால் எப்படி? விவசாயிகள் இந்த விதிகளை பின்பற்றமாட்டார்கள். மஞ்சு விரட்டுக்கு ஊக்கமளித்தால், நாட்டிலேயே பிரபலமடையும். பாண்டவர் காலத்தில் இருந்தே, இத்தகைய வீர விளையாட்டுகள் உள்ளன. இந்த போட்டியால் காளைகளுக்கு ஊட்டச்சத்தான உணவும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். யார் பொறுப்பு? மாவட்டத்தில் ஆண்டுதோறும், காளைகளை விரட்டும் போட்டியால், அப்பாவி உயிர்கள் போகின்றன. நடப்பாண்டு தீபாவளி நாளன்று, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தனித்தனியாக நடந்த போட்டிகளில், நால்வர் இறந்தனர். இவர்கள் போட்டிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள். காளைகள் தறிகெட்டு ஓடி, எதிரே வருவோரை குத்துவதால் இறப்பு நடக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? காளைகளுக்கு போதை தரும் திரவத்தை புகட்டுகின்றனர். 'ஷாக்' கொடுக்கின்றனர். போதை தரும் கீரைகளை சாப்பிட வைக்கின்றனர். ரசாயனம் கலந்த சாயத்தை காளைகளின் உடலில் பூசுகின்றனர். காளைகளின் வாலை முறித்தும், கடித்தும் துன்புறுத்துகின்றனர். இதனால் அவை கோபமடைந்து, கண்மூடித்தனமாக ஓடி மக்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே, மஞ்சு விரட்டுக்கு அனுமதி அளிக்கப்படும். யசோதா வன்டகோடி, ஹாவேரி எஸ்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை