வாணி விலாஸ் மருத்துவமனையில் ரத்த சேமிப்பு வங்கி துவக்க அனுமதி
பெங்களூரு : பிரசவத்தின்போது கர்ப்பிணியரும், குழந்தை பெற்ற பெண்களும் இறப்பதை தடுக்கும் நோக்கில், பெங்களூரின் வாணி விலாஸ் மருத்துவமனையில் புதிய ரத்த சேமிப்பு வங்கி துவக்க, சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள்கூறியதாவது:பிரசவத்தின்போது கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு சரியான நேரத்தில், ரத்தம் கிடைக்காததும் காரணமாகிறது.பெங்களூரின் வாணி விலாஸ் மருத்துவமனை, மாநில அளவிலான மகப்பெறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாகும். பெங்களூரு மட்டுமின்றி, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்ப்பிணியர், குழந்தைகள் சிகிச்சைக்குவருகின்றனர்.அவசர சிகிச்சை தேவைப்படுவோர், சிக்கலான அறுவை சிகிச்சை அவசியம் உள்ள கர்ப்பிணியருக்கு, வாணி விலாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.இங்கு தினமும் 1,500 முதல், 1,800 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு மட்டும் ஆண்டுதோறும் 8,000 யூனிட் ரத்தம் தேவைப் படுகிறது.விக்டோரியா மருத்துவமனையில் இருந்து, 50 அடி துாரத்தில் இருந்தாலும், அவசர சந்தர்ப்பத்தில் கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்களின் இறப்பை தவிர்க்க முடியவில்லை. இதைத் தவிர்க்க வாணி விலாஸ் மருத்துவனையில், புதிதாக ரத்த சேமிப்பு வங்கி அமைக்க சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையத்தில் தேவையான ஊழியர்கள், மருத்துவ இயந்திரங்கள் உட்பட, அனைத்து வசதிகளும் இருக்கும்.அதே போன்று சிக்கபல்லாபூர் மாவட்ட மருத்துவமனைக்கும், தினம் 800 முதல் 900 வெளி நோயாளிகள் வருகின்றனர். 300 முதல் 400 சுகப்பிரசவங்கள், 120 முதல் 150 முதல் சிசேரியன்கள் நடக்கின்றன.இந்த மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 3,500 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு ரத்த சேமிப்பு வங்கி இல்லை.தானம் செய்வோரிடம் ரத்தம் பெற்று, சேமித்து வைப்பது கஷ்டமாக உள்ளது. அரசு மாவட்ட மருத்துவமனைகளில், ரத்த சேமிப்பு வங்கி இருக்க வேண்டும் என்பதுவிதிமுறை.எனவே சிக்கபல்லாபூர் மருத்துவமனையிலும், ரத்த சேமிப்பு வங்கி துவக்க சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.