பொது இடத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி கட்டாயம்
பெங்களூரு: பொது இடத்தில் தனியார் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறுவது கட்டாயம் என, அதிகாரப்பூர்வ உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில், அரசு, பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சி நடத்த அரசு தடை விதித்தது. தேவைப்பட்டால் அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்தலாம் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்கக் கோரி, முதல்வருக்கு கடிதம் எழுதிய, அமைச்சர் பிரியங்க் கார்கேயை கண்டித்து அவரது தொகுதியான, கலபுரகி சித்தாபுராவில் ஆர்.எஸ்.எஸ்., இன்று பேரணி நடத்த முடிவு செய்திருந்தது. பேரணிக்காக கட்டப்பட்டிருந்த காவி கொடிகள், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக அகற்றப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், பொது இடத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி கட்டாயம் என்று, நேற்று இரவு அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்தது. அரசு, அரசு சார்ந்த பள்ளி, கல்லுாரியில் தனியார் நிகழ்ச்சி நடத்த பள்ளி கல்வி, உயர்கல்வி துறையிடமும்; பூங்கா, விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த நகர மேம்பாட்டுத் துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையிடமும்; பொது இடம், அரசு இடங்களில் நடத்த கலெக்டர், எஸ்.பி., போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும் என்று, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.