ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும்
கலபுரகி: ''நான் அமைச்சராக இருக்கும் வரை, ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும்,'' என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி: நான் ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். அது, ஒன்றும் 100 வருட பழமையான அமைப்பு அல்ல. உங்கள் அமைப்பின் ஆவணங்கள் எங்கே... ஊர்வலம் நடத்த அனுமதி பெற வேண்டும். ஆவணங்கள் எங்காவது இருக்கலாம்... அவற்றை கண்டுபிடிப்போம். ஆர்.எஸ்.எஸ்., குறித்து நான் பேசிய பின், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்கள், எனக்கு திருமணமாகி விட்டதா; குழந்தைகள் உள்ளனவா; வெள்ளையா, கருப்பா... என துருவித்துருவி ஆராய்கின்றனர். நீங்கள் என்ன தான் ஆராய்ந்தாலும், நான் பயன்படுபவன் அல்ல. என் நிறத்தை பற்றி பேசுபவர்களுக்கு, என் செயல்களே பதிலடி கொடுக்கும். ராமர் கோவில் கட்டுமான பொறுப்பில் இருந்த கோபால் ஜி, 40 சதவீதம் கமிஷன் பெற்று கொண்டு, தனது மருமகனுக்கு ஒப்பந்தத்தை வழங்கி உள்ளார். அயோத்தியையும், பா.ஜ., விட்டு வைக்கவில்லை. அங்கும் ஒரு கமிஷன் மோசடி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.