ஷோபா வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி
பெங்களூரு: லோக்சபா தேர்தலில், பெங்களூரு வடக்கு தொகுதியில், பா.ஜ.,வின் ஷோபா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த வெற்றியை எதிர்த்து, பெங்களூரு நந்தினி லே - அவுட்டை சேர்ந்த மோகன் குமார் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.மனுவில், 'வேட்புமனுத் தாக்கலின் போது, படிவம் 26ஐ முழுமையாக பூர்த்தி செய்யாமல், தேர்தல் கமிஷனில் ஷோபா தாக்கல் செய்துள்ளார். தன் மீதுள்ள குற்ற வழக்குகளை குறிப்பிடவில்லை. எனவே, அவர் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.இம்மனு நீதிபதி இந்திரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று தீர்ப்பு அறிவிப்பதாக தெரிவித்தார்.தீர்ப்பில், ''மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951ன், பிரிவு 81ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இம்மனு, எதன் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்பதை தெளிவாக கூற தவறிவிட்டது. எனவே, மனுதாரர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.