உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தசராவை பானு முஷ்டாக் துவக்க எதிர்ப்பு தெரிவித்த மனு... தள்ளுபடி!:அரசு விழாவில் மாற்று மதத்தினர் பங்கேற்கலாம்

தசராவை பானு முஷ்டாக் துவக்க எதிர்ப்பு தெரிவித்த மனு... தள்ளுபடி!:அரசு விழாவில் மாற்று மதத்தினர் பங்கேற்கலாம்

 பா.ஜ., பிரதாப் சிம்ஹா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடிநடப்பாண்டு மைசூரு தசரா விழா, வரும் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதை விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் செய்து வருகின்றனர். இந்நிலையில், 'நடப்பாண்டு தசராவை, 'புக்கர்' பரிசு பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைப்பார்' என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தசராவை பானு முஷ்டாக் துவக்கி வைக்கும் உத்தரவை திரும்ப பெற கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, பெங்களூரு தொழிலதிபர் கிரிஷ் குமார், அபிநவ் பாரத் கட்சி தேசிய துணைத் தலைவர் சவுமியா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. வழக்கில் நேற்று நடந்த விவாதம்: பிரதாப் சிம்ஹா தரப்பு வக்கீல் சுதர்ஷன்: பானு முஷ்டாக், கடந்த, 2023ல் ஹிந்து பாரம்பரியத்துக்கு எதிராகவும், கன்னட மொழிக்கு எதிராகவும் கருத்துகள் வெளியிட்டு உள்ளார். தசராவை துவக்கி வைக்க தேர்வு செய்யப்படுவோர், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்வது மரபு. இது பின்பற்றப்படவில்லை. பானு முஷ்டாக், மஞ்சள், குங்குமம், பூக்களை நம்புவதில்லை. தசரா என்பது ஹிந்து பண்டிகை. மதச்சார்பற்ற பண்டிகை அல்ல. நீதிபதிகள்: நாட்டில் தங்கள் கருத்தை தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா. அப்படி என்றால், உங்களின் அரசியலமைப்பு உரிமை என்ன என்று கூறுங்கள். சுதர்ஷன்: இது ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகை: நீதபதிகள்: நீங்கள் உங்கள் கருத்தை கூறுங்கள். ஆசாரத்தை பின்பற்றுவது அவரவர் வேலை. மற்றொரு மனுதாரர் வக்கீல் ரங்கநாத் ரெட்டி: ஹிந்து கடவுள் வழிபாட்டை ஆகம சாஸ்திரங்களில் இருந்து பிரிக்க முடியாது. ஹிந்து அல்லாத ஒருவர், தசராவை துவக்கி வைக்க முடியுமா என்பது தான் கேள்வியே. பானு முஷ்டாக், ஹிந்து கடவுள்களை நம்புவதாக இருந்தால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி: மனுதாரர் பிரதாப் சிம்ஹாவுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அவர் எம்.பி.,யாக இருந்தபோது, 2017ல் நிசார் அகமது, தசராவை துவக்கி வைத்தார். அப்போது எந்த பிரச்னையும் எழவில்லை. பானு முஷ்டாக் புக்கர் பரிசு வென்றவர். தசராவை துவக்கி வைக்க அழைக்கப்பட்டு உள்ளார். அதுபோன்று எழுத்தாளர் நிசார் அகமது, தசராவை துவக்க அழைத்த போது, பிரதாப் சிம்ஹா பிரச்னை செய்யவில்லை. இது ஒரு மாநில விழா. அரசியலமைப்பு பிரிவு 15ன் படி அரசு முடிவெடுத்து உள்ளது. அனைத்து கட்சிகளின் தலைவர்களை கொண்ட தசரா குழு, விழாவை துவக்கி வைக்கும் உரிமையை, முதல்வர் சித்தராமையாவுக்கு கொடுத்து உள்ளது. எனவே, பானு முஷ்டாக்கை முதல்வர் தேர்வு செய்தார். ஹிந்து - முஸ்லிம் இடையே பிளவை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தசரா ஒரு மதச்சார்பற்ற பண்டிகை. இது, ஒரு மத நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது. சுதர்ஷன்: ஒரு முஸ்லிமாக இருந்தபோது, நிசார் அகமது, கன்னட தாய் பற்றி ஒரு கவிதை எழுதினார். அவர், கன்னடத்துக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நீதிபதிகள்: மாநில அரசு ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்ச்சியில், வேறு மதத்தை சேர்ந்த ஒருவர் பங்கேற்பதில் எந்த தடையும் இல்லை. அரசின் உத்தரவு, இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதற்கு எதிரானது என்பதை நிரூபிக்க, மனுதாரர்கள் தரப்பு தவறவிட்டது. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. விஜயதசமி என்றால் என்ன? தீமையை நன்மை வென்ற நாள். இந்த பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. அப்போது குறுக்கிட முயற்சித்த பிரதாப் சிம்ஹா தரப்பு வக்கீலை பார்த்து நீதிபதிகள் உரத்த குரலில், 'எங்கள் உத்தரவை கூறிவிட்டோ ம். உங்களுக்கு அப ராதம் விதிக்க வேண்டும். இதுபோன்று நீதிமன்றத்தில் செயல்படக்கூடாது' என தெரி வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2025 22:18

2017ல் நிசார் அகமது, தசராவை துவக்கி வைத்தார். அப்போது எந்த பிரச்னையும் எழவில்லை.- ஏன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை