கல்லுாரி மாணவி பலாத்காரம் பி.ஜி., உரிமையாளர் கைது
சோழதேவனஹள்ளி: கல்லுாரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த, தங்கும் விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரு, சோழதேவனஹள்ளியை சேர்ந்தவர் அஷ்ரப், 32. பி.ஜி., எனும் தனியார் தங்கும் விடுதி உரிமையாளராக உள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு 22 வயது கல்லுாரி மாணவி ஒருவர், பி.ஜி.,க்கு வந்து அறை எடுத்து தங்கினார். மாணவிக்கு தேவையான உதவிகளை அஷ்ரப் செய்து கொடுத்தார். கடந்த 31ம் தேதி இரவு மாணவி, பி.ஜி.,யின் முன்பு நின்றார். அப்போது அங்கு காரில் வந்த அஷ்ரப், மாணவியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென மாணவியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, மாணவியை பலாத்காரம் செய்தார். இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். பின், மாணவியை மீண்டும் பி.ஜி.,யில் இறங்கி விட்டு சென்றார். பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்தவர்கள், அஷ்ரப் மீது சோழதேவனஹள்ளி போலீசில் கடந்த 1ம் தேதி புகார் செய்தனர். தலைமறைவாக இருந்த அஷ்ரப் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.