மாலுார் - தர்மஸ்தலா பக்தர்கள் புனித பயணம்
மாலுார் : தர்மஸ்தலா கோவில் மீது எழுப்பப்பட்ட புகார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலுாரில் இருந்து தர்மஸ்தலாவுக்கு 7, 000 பக்தர்கள் இன்று இரவு புறப்படுகின்றனர். தர்மஸ்தலா பக்தர்கள் குழு தலைவர் ஹூடி விஜயகுமார் மாலுாரில் அளித்த பேட்டி: தர்மஸ்தலா கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, அதன் கவுரவமிக்க புனிதத் தன்மையை பாழ்படுத்த அவதுாறு பிரசாரம் செய்கின்றனர். அவைகள் எல்லாமே பொய்யாகி வருகிறது. மிக சக்தி வாய்ந்த இக்கோவிலின் புனித தன்மையை பாதுகாக்க தர்மஸ்தலா பக்தர்கள் ஒருங்கிணைந்து மாலுாரில் இருந்து தர்மஸ்தலா செல்ல தீர்மானித்துள்ளோம். மாலுார் கிராமப்பகுதிகளில் இருந்து 350 -- 400 கார்கள், 300 பஸ்கள், இது தவிர தனி தனியாக அவரவர் கார்களில் இன்று இரவு புறப்பட்டு தர்மஸ்தலா செல்ல உள்ளோம். இதற்கான முன் அனுமதி கேட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு மனு அளித்திருக்கிறோம். வெள்ளிக்கிழமை தர்மஸ்தலாவில் தீப உற்சவம், ஹோம பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஹிந்து தர்மத்தை காக்க, தர்மஸ்தலா பக்தர்களின் பயணமாக இது அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.