உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மல்லேஸ்வரத்தில் கடலைக்காய் திருவிழாவில் பிளாஸ்டிக் தடை

மல்லேஸ்வரத்தில் கடலைக்காய் திருவிழாவில் பிளாஸ்டிக் தடை

பெங்களூரு: மல்லேஸ்வரத்தின், காடு மல்லிகார்ஜுன சுவாமி கோவில் வளாகத்தில், கடலைக்காய் எனும் வேர்க்கடலை திருவிழா நேற்று துவங்கியது. இம்முறை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல், திருவிழா நடக்கிறது. பெங்களூரு, மல்லேஸ்வரத்தின், காடு மல்லிகார்ஜுன சுவாமி கோவில் வளாகத்தில் ஆண்டு தோறும் கடலைக்காய் எனும் வேர்க்கடலை திருவிழா நடப்பது வழக்கம். 10ம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நேற்று துவங்கியது. பொது மக்களுக்கு தரமான கடலைக்காய் கிடைக்க செய்யும் நோக்கில், காடு மல்லேஸ்வரா நண்பர்கள் சங்கத்தினர் சார்பில், இந்த திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவில் 600 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இம்முறை பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தாமல், துணிப்பை, காகிதப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து, நண்பர்கள் சங்கத்தலைவர் சிவராம் கூறியதாவது: இம்முறை கடலைக்காய் திருவிழாவில், பிளாஸ்டிக் தவிர்க்கப்படுகிறது. துாய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வறட்சி நிலவுகிறது. எனவே, இம்முறை கடலைக்காய் திருவிழாவுக்கு, கர்நாடக விவசாயிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவின் விவசாயிகள் கடலைக்காய் விற்பனைக்கு வந்துள்ளனர். இடைத்தரகர்களின் தொந்தரவை தவிர்த்து, விவசாயிகளுக்கு நேரடி மார்க்கெட் வசதியை செய்து தரும் வகையில், 600 கடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மூன்று நாட்கள், திருவிழா நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !