உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு போக்குவரத்து நெருக்கடி: தீர்வு காண போலீசார் ஆலோசனை

 பெங்களூரு போக்குவரத்து நெருக்கடி: தீர்வு காண போலீசார் ஆலோசனை

பெங்களூரு: பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, மாநில அரசுக்கு போக்குவரத்து போலீசார், சில சிபாரிசுகளை செய்துள்ளனர். இது குறித்து, போக்குவரத்து உயரதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரில் வாகன போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதுகுறித்து, போக்குவரத்து பிரிவு இணை போலீஸ் கமிஷனர் கார்த்திக் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்து, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவிடம் அறிக்கை அளித்துள்ளனர். ஆலோசனை அறிக்கை தொடர்பாக, அமைச்சரின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கனரக சரக்கு வாகனங்களின் போக்குவரத்தால் நகரின் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய வாகனங்களின் போக்குவரத்துக்கு, தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும். குறிப்பாக காலை, மாலை நேரத்தில் எந்தவிதமான சரக்கு வாகனங்களும், நகருக்குள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். புறநகரில் இருந்து வரும், தேசிய போக்குவரத்து பர்மிட் வைத்துள்ள தனியார் பஸ்கள், பெங்களூருக்குள் வராமல், முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும். இவற்றை நிறுத்த தனி இடம் நிர்ணயிக்க வேண்டும். இதற்கு முன் ஐ.டி., - பி.டி., நிறுவனங்களில், வெற்றிகரமாக செயல்பட்ட, 'கார் பூலிங்' நடைமுறையை, அரசு அதிகாரப்பூர்வமாக்க வேண்டும். கொரோனாவுக்கு முன், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நடைமுறையை பின்பற்றியதால், சாலைகளில் ஓடும் வாகனங்கள் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது. இப்போது இதை அதிகாரப்பூர்வமாக்கலாம். விபத்துகள் மேம்பாலங்களில் பைக்குகள், சிறிய சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதித்தால், விபத்துகள் குறையும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன பயணியருக்கு விதிக்கும் அபராத தொகையை, மத்திய அரசு உயர்த்தி உத்தரவிட்டது. மாநிலத்திலும் இதை செயல்படுத்த வேண்டும். சிக்னல் ஜம்ப், ஒரு வழிப்பாதையில் பயணிப்பது, வாகனம் ஓட்டும் போது, மொபைல் போனில் பேசுவது போன்ற விதிமீறல்களுக்கு, விதிக்கப்படும் அபராத தொகையை, 500 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ