ஹூப்பள்ளி - தார்வாடில் மர்ம நபர்கள் நடமாட்டம் பா.ஜ., - எம்.எல்.ஏ., கடிதத்தால் போலீசார் உஷார்
தார்வாட் : ''ஹூப்பள்ளி - தார்வாடில் சந்தேகிக்கும் படி நபர்கள் சுற்றித்திரிவதாக, எம்.எல்.ஏ., அனுப்பிய கடிதம் தொடர்பான விசாரணையில், குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற வந்துள்ளது தெரியவந்து உள்ளது,'' என தார்வாட் - ஹூப்பள்ளி நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார்.'ஹூப்பள்ளி - தார்வாட் நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் நடமாடுவதாகவும், மே 2 முதல் 10 ம் தேதிக்குள் நுாற்றுக்கணக்கான சிம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது' என நகர போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் கடிதம் எழுதியிருந்தார்.இது தொடர்பாக நேற்று கமிஷனர் சசிகுமார் அளித்த பேட்டி: எம்.எல்.ஏ., கடிதம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தினோம். அவர் குறிப்பிட்ட ஜன்னத், ஆரோக்கியா நகர் பகுதிகளில், சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் குறித்து விசாரித்தோம். அத்துடன் போலீசார் 'மப்டி'யில் கண்காணித்து, பல தகவல்களை சேகரித்தனர்.சிம் கார்டுகள் வாங்கியவர்கள் முழு விபரங்களையும் சேகரித்துள்ளோம். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்கள் சிலர் பயிற்சிக்காக இங்கு வந்துள்ளனர். வெளிநாட்டு நபர்கள் உள்ளனரா என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் குறித்த தகவல்களை, மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.ஹூப்பள்ளி - தார்வாடில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் உள்ளார். அவர் நீண்ட நாள் விசாவில் இந்தியாவுக்கு வந்து உள்ளார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் அளித்துள்ளோம். அவரை அனுப்புவதா இல்லையா என்பது குறித்து அரசு எந்த வழிகாட்டுதலும் கூறவில்லை.சமூக ஊடகங்கள் கண்காணிப்பு பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யாராவது பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்கள் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர். அவ்வாறு தகவல் பரப்பும் பதிப்பில் 'லிங்க்'கை போலீஸ் வாட்ஸாப்புக்கு அனுப்பினாலும் சரி, அந்நபரின் சமூக வலைதள கணக்கு விபரங்களை அனுப்பினாலும் சரி, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.