கிரிமினல்களுடன் தொடர்பு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
பெங்களூரு: “கிரிமினல்களுடன் கைகோர்த்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, போலீசாருக்கு பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் எச்சரித்தார். பெங்களூரின், தனிச்சந்திரவின், போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில், போலீசாரின் அணிவகுப்பு நேற்று நடந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் ஏற்றுக்கொண்டார். அவர் பேசியதாவது: கிரிமினல்களுடன் போலீசார் அடையாளம் காணப்பட்டால், சமுதாயத்துக்கு தவறான தகவல் செல்லும். எந்த காரணத்தை கொண்டும், போலீசார் இத்தகைய செயலில் ஈடுபட்டால் சகிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு பணியின்போது, உங்களை தற்காத்துக் கொண்டு, ஹெல்மெட், லத்தி வைத்து கடமையை செய்யுங்கள். பெயரளவுக்கு நின்றிருந்தால் போதாது. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். பாதுகா ப்பு பணிக்கு செல்லும் போலீசாரை, அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்ப வேண்டும். அதிகாரிகள், ஏட்டுகள் செல்லும்போது, சீருடை இருந்தால் போதாது. பாதுகாப்பு பணியின்போது, ஆயுதங்களுடன் செல்ல வேண்டும். பெங்களூருக்கு கே.எஸ்.ஆர்.பி.,யினர் வந்தாலும், ஹெல்மெட், லத்தி வைத்திருப்பது கட்டாயம். சமுதாயத்தின் நலனுக்கு நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என, இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாடுங்கள். போலீசார் சிறப்பாக பணியாற்றி, பெங்களூருக்கு நல்ல பெயர் கிடைக்க செய்ய வேண்டும். போலீசாரின் ஆரோக்கிய பாதுகாப்புக்காக, மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இத்திட்டம் வெற்றி அடைந்தால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மருத்துவ பரிசோதனை ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழ மையும் நடக்கும் அணிவகுப்பில், தவறாமல் பங்கேற்க வேண்டும். அணிவகுப்பு நடத்துவதால், ஒழுங்கு வரும். அணி வகுப்பு மைதானத்துக்கு வந்தவுடன், தாங்கள் பயிற்சியின்போது கற்பித்த பாடங்களை, நினைவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.