ஜிம்மில் அடிதடி போலீசில் புகார்
பெங்களூரு : 'ஜிம்'மில் நடந்த தாக்குதல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆதரவாளரும், தொழிலதிபரும் பரஸ்பரம் புகார் அளித்து உள்ளனர்.பெங்களூரை சேர்ந்தவர் தொழிலதிபர் கீதா விஷ்ணு. ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஹோட்டலில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்.கடந்த 19ம் தேதி வழக்கம் போல் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த சையது சாதிக், உடை மாற்றிக் கொண்டிருந்தார்.வியர்வை சொட்டச் சொட்ட அங்கு வந்த கீதா விஷ்ணுவை பார்த்து, சாதிக் சத்தம் போட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் கைகலப்பாகி, கீதா விஷ்ணுவை, சையது சாதிக் தாக்கினார். இதில், கீதா விஷ்ணுவின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது.அங்கிருந்த மற்றவர்கள், அவரை விலக்கினர். அப்போது சையது சாதிக், 'இனி நீ இந்த ஜிம்மிற்கு வரக்கூடாது. அப்படி வந்தால், அது தான் உன்னுடைய கடைசி நாள்' என்று எச்சரித்தார்.இது தொடர்பாக ஹைகிரவுண்ட் போலீசில் கீதா விஷ்ணு புகார் அளித்தார். அதுபோன்று சையது சாதிக்கும், தன்னை தாக்கியதாக புகார் அளித்து உள்ளார்.இது குறித்து கீதா விஷ்ணு கூறுகையில், ''இரண்டு வாரங்களுக்கு முன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் கவுடாவுக்கும், எனக்கும் அதே ஹோட்டலில் சிறு தகராறு ஏற்பட்டது. அப்போது அவருடன், சையது சாதிக் உட்பட மூன்று நான்கு பேர் இருந்தனர்.''பின் ஹோட்டல் ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தற்போது மீண்டும் அதுபோன்று தாக்குதல் நடந்து உள்ளது. திட்டமிட்டே நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.