போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் நாடகம்! மத்திய அமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு
பெங்களூரு: ''பாதுகாப்பு காரணங்களுக்காக விதான் சவுதா முன் ஆர்.சி.பி., அணி பாராட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்று, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் கமிஷனர் தயானந்தா கூறியும் கேட்காமல், முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜ் கொடுத்த அழுத்தத்தால் தான், விதான் சவுதா முன் நிகழ்ச்சி நடந்தது. ''போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நாடகம்,'' என, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:பாதுகாப்பு காரணங்களுக்காக விதான் சவுதா முன் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்று, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் கமிஷனர் தயானந்தா கூறினார். ஆனால் முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜ் கொடுத்த அழுத்தத்தால் தான், விதான் சவுதா முன் நிகழ்ச்சி நடந்தது.தயானந்தாவிற்கு நான் ஆதரவாக இல்லை. போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, ஒரு நாடகம்.ஆர்.சி.பி., அணியினரை, ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் சித்தராமையா தான் வரவேற்பதாக இருந்தது. இதுபற்றி அறிந்ததும் கனகபுராவில் இருந்து அவசர, அவசரமாக காரில் ஆர்.சி.பி., கொடியை பிடித்துக் கொண்டு சிவகுமார் வந்தார். நாடகம் தேவையா?
விராத் கோலியிடம், சிவகுமார் கன்னடக் கொடி கொடுத்தார். ஆனால் கன்னட சால்வை அணியவில்லை. சிவகுமார் கொடுத்த கன்னடக் கொடியை, கோலி திருப்பிக் கொடுத்துவிட்டார். இந்த நாடகம் தேவையா? விதான் சவுதாவில் நடந்தது அரசு நிகழ்ச்சி இல்லை.முதல்வரின் பேரன், அமைச்சர்களின் பிள்ளைகள், ஆர்.சி.பி., வீரர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி. கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் இறந்தபோது, சித்தராமையா, தன் பேரனுடன் ஹோட்டலுக்கு சென்று தோசை, பாதாம் அல்வா சாப்பிட்டு கொண்டு இருந்தார். இதெல்லாம் நியாயமா? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் செயலற்றவர். சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை. அவரை திட்டுவதால் எந்த பயனும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். அதிகாரிகள் பலிகடா
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட 11 பேர் உயிரிழந்த வழக்கில், துணை முதல்வர் சிவகுமார் முதல் குற்றவாளி, முதல்வர் சித்தராமையா இரண்டாவது குற்றவாளி, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மூன்றாவது குற்றவாளி. 11 பேர் இறந்தது பற்றி முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த பின், அரசு தவறை திருத்திக் கொண்டது. அதன்பின் ஆர்.சி.பி., - தனியார் நிறுவனம் - மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அரசு செய்த தவறுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா ஆகிவிட்டனர்.அரக்கத்தன்மை கொண்ட காங்கிரஸ் அரசு கவிழ வேண்டும் என்பது, மாநில மக்களின் விருப்பம். உப்பார்பேட் போலீஸ் நிலையம் அருகே, ஒரு ஆட்டோ டிரைவரை சந்தித்தேன். 'நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து என்ன செய்கிறீர்கள்? அரசை கவிழ்த்துவிட்டு நீங்கள் ஆட்சிக்கு வாருங்கள்' என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.