பூணுால் விவகாரத்தில் அரசியல் சதீஷ் ஜார்கிஹோளி குற்றச்சாட்டு
பெலகாவி : பூணுால் விவகாரத்தில் பா.ஜ., அரசியல் செய்வதாக, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி குற்றம் சாட்டி உள்ளார்.கர்நாடகாவில் இன்ஜினியரிங் உட்பட தொழில்நுட்பப் படிப்புக்கான, பொது நுழைவுத் தேர்வு கடந்த 16ம் தேதி நடந்தது. பீதரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், சுசிவ்ரித் குல்கர்னி என்ற மாணவர் தேர்வு எழுதச் சென்றபோது, பூணுாலை கழட்டும்படி தேர்வு மைய அதிகாரிகள் கூறினர். இதற்கு மறுத்ததால் அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது.இந்த விவகாரம், மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.,வின் சார்பில் கண்டனங்கள் எழுந்தன. பிராமணர்களுக்கு சித்தராமையா அரசு அநீதி இழைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் பின், சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இதுகுறித்து, பெலகாவியில் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியதாவது:பூணுால் விவகாரத்தில் பா.ஜ., தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்.இதில் அரசாங்கம் எந்த தவறும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட தேர்வு அதிகாரிகளே தவறு செய்துள்ளனர்.இதையெல்லாம் அறிந்தும் பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் பாட்டீல் அரசிற்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளார். ஆனால், அவர் வேறு எந்த பிரச்னைகளுக்கும் வீதியில் இறங்கி போராடவில்லை.இப்பிரச்னையை பெரிதாக்கக் கூடாது. என் மகன் ராகுல் பெலகாவி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.இவ்வாறு கூறினார்.