டில்லி பயணத்தில் அரசியல்? அமைச்சர் பரமேஸ்வர் நழுவல்!
பெங்களூரு: ''அரசியல் நோக்கத்துடன் நான் டில்லி செல்லவில்லை'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:டில்லியில் காங்கிரஸ் புதிய அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. புதிய அலுவலகத்தை பார்ப்பதற்காகவும், சில தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் டில்லி சென்றேன்.அங்கு கட்சியின் பொது செயலர் வேணுகோபாலை சந்தித்தேன். வேறு எந்த தலைவரையும் சந்திக்கவில்லை. அவருடன் நான் அரசியல் பேசவில்லை. அந்த நோக்கத்திற்காக டில்லி செல்லவில்லை. அரசியலில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.முதல்வர், காங்கிரஸ் தலைவர் மாற்றம், எஸ்.சி., - எஸ்.டி., சமூக மாநாடு பற்றி பேசவே இல்லை. அப்படி இருந்தால் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சோனியாவை நான் சந்தித்து இருப்பேன்.முதல்வர் மீதான, 'முடா' வழக்கில் லோக் ஆயுக்தா நன்கு விசாரித்து உள்ளது. ஆதாரம் இல்லாததால் முதல்வர் குற்றமற்றவர் என்று 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் லோக் ஆயுக்தா விசாரணை குறித்து, பா.ஜ., தலைவர்கள் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு சரி என்றால் சரி; தவறு என்றால் தவறா. இது தான் அவர்களின் அரசியலா.ஒரே வழக்கை இரண்டு அமைப்புகள் விசாரிப்பது சரியாக இருக்காது என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. லோக் ஆயுக்தா சுதந்திரமான விசாரணை நிறுவனம். கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், சில இடங்களில் பெண்களுக்கு 2,000 ரூபாய் உதவி தொகை வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இப்பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்.பா.ஜ., ஆட்சியில் நடந்த பணிகளுக்கு கான்ட்ராக்டர்களுக்கு பணம் வழங்கவில்லை. அவர்கள் செலுத்தாமல் சென்ற பில் தொகையையும் சேர்த்து, நாங்கள் வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.