மாணவியுடன் பேராசிரியர் தொடர்பு மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
பெங்களூரு: மாணவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது மட்டுமன்றி, படிப்பை பாதியில் நிறுத்தி, ஊருக்கு சென்று விட்ட அவரை மீண்டும் அழைத்து வரும்படி, மாணவர்களுக்கு பேராசிரியர் நெருக்கடி கொடுப்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தார்வாடின், கர்நாடக பல்கலைக்கழகத்தில், தாவரவியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றுபவர் தேவராஜ் தங்கதுரை, 45. இதே பல்கலைக்கழகத்தில், விஜயபுராவை சேர்ந்த மாணவி, பி.ஹெச்டி., படித்து வந்தார். இம்மாணவியிடம் பேசி மயக்கிய, பேராசிரியர் தேவராஜ் தங்கதுரை, தன் வலையில் விழ வைத்தார். இருவரும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர். இதில், மூன்று முறை கர்ப்பமடைந்த மாணவிக்கு, பலவந்தமாக கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இந்த விஷயம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. படிப்பை பாதியில் நிறுத்தி, மகளை ஊருக்கு அழைத்து சென்றனர். மாணவி தன்னை விட்டு சென்றதால், தேவராஜ் தங்கதுரை 'சைக்கோ' போல நடந்து கொண்டார். மாணவியும், தானும் எடுத்து கொண்ட அந்தரங்கமான போட்டோக்களை, சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, விஜயபுராவை சேர்ந்த மாணவர் வேதவியாஸ் சவுஹான், பி.ஹெச்டி., படிப்பதற்காக, இதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். அவரிடம் பேராசிரியர் தேவராஜ் தங்கதுரை, 'என்னை விட்டு சென்ற மாணவியை, நீ தான் மீண்டும் கல்லுாரிக்கு அழைத்து வர வேண்டும். அவரை அழைத்து வந்தால் மட்டுமே, உன்னை பி.ஹெச்டி.,யை முடிக்க விடுவேன். இல்லையென்றால் முடிக்க விடமாட்டேன்' என, நெருக்கடி கொடு ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போல, மேலும் சில மாணவர்களுக்கு அவர் தொந்தரவு கொடுத்ததால், மாணவர்கள் கோபமடைந்து, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர். இவர் மீது பல்கலைக்கழக துணைவேந்தரிடமும், மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.