உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ட்ரோன் மூலம் சொத்து கணக்கெடுப்பு: பா.ஜ.,வின் ராமமூர்த்தி கடும் எதிர்ப்பு

 ட்ரோன் மூலம் சொத்து கணக்கெடுப்பு: பா.ஜ.,வின் ராமமூர்த்தி கடும் எதிர்ப்பு

பெங்களூரு: ஜி.பி.ஏ., வரம்பிற்கு உட்பட்ட பகுதியில், ட்ரோன் மூலம் சொத்து கணக்கெடுப்பு நடத்த, சட்டசபையில் பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் கேள்வி நேரத்தில் பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜ., உறுப்பினர் ராமமூர்த்தி பேசியதாவது: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துகள், கட்டடங்களின் உரிமையாளர்களிடம் இருந்து வரி வசூல் செய்ய, ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். ட்ரோன் மூலம் ஒரு வீட்டில் கணக்கெடுப்பு நடக்கும் போது, வீட்டில் இருக்கும் பூந்தொட்டிகள், பார்க்கிங்கும் சேர்த்து கணக்கெடுக்கப்படுகிறது. இதனால் கூடுதல் வரி, அபராதம் விதிக்கப்படுகிறது. எனது தொகுதியில் சில வீடுகளின் உரிமையாளர்களிடம் சொத்து வரி என்று எட்டு லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலித்து உள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டால், ட்ரோன் கணக்கெடுப்பை காரணம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். அப்போது குறுக்கிட்ட ராஜாஜிநகர் பா.ஜ., உறுப்பினர் சுரேஷ்குமார், ''இது வரி பயங்கரவாதம். ட்ரோன் கணக்கெடுப்பை அரசு கைவிட வேண்டும்,'' என்றார். துணை முதல்வர் சிவகுமார் பதில் அளிக்கையில், ''ட்ரோன்கள் எடுக்கும் கணக்கெடுப்பை வைத்து வரி வசூலிப்பது இல்லை. ட்ரோன் மூலம் கணக்கெடுப்பதில் யாருக்காவது பிரச்னை இருந்தால் கூறுங்கள். அதை சரி செய்கிறோம்,'' என்றார். எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், '' இது துக்ளக் தர்பார் அரசு. ஐந்து மாநகராட்சிகளை உருவாக்கி புதிய வரிகளை கொண்டு வந்து உள்ளனர். ட்ரோன் மூலம் கணக்கெடுத்து வரி வசூலிப்பது காட்டுமிராண்டி தனமானது. இதனை நிறுத்தி விட்டு, வளங்கள் திரட்ட வேறு வழியை தேடுங்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி