உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும்  சிறுமியருக்கு பாதுகாப்பு வழங்குங்கள் 

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும்  சிறுமியருக்கு பாதுகாப்பு வழங்குங்கள் 

பெங்களூரு: 'பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுமியருக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கு, நிலையான செயல்பாட்டு நடைமுறையை செயல்படுத்துங்கள்,' என்று, மாநில அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பம் ஆன சிறுமியின் கருவை கலைக்க உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் நேற்று விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக, நிலையான செயல்பாட்டு நடைமுறையை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை செயலர், டி.ஜி.பி., இணைந்து, இதுதொடர்பான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்வதுடன், பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கு, நிலையான செயல்பாட்டு நடைமுறையை செயல்படுத்த வேண்டும். சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பின், அவர்களை குழந்தைகள் நல குழுவின் பாதுகாப்பில் கொண்டு வர வேண்டும். கட்டாய கண்காணிப்பு, தரவுகளை பகிர்வது, தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், பாதுகாப்பான ஒருங்கிணைந்த டிஜிட்டல் இணையதளம் துவங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம், ஆவணங்கள் எந்த சூழ்நிலையிலும் வெளிவராமல் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு தேவையான உதவிகளை வழங்க, குழந்தைகள் நல குழுவில் இருந்து, அதிகாரியை நியமிக்க வேண்டும். சிறுமியர் மீதான பாலியல் வழக்கில், வழக்குப்பதிவான ஏழு நாட்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவால் நியமிக்கப்பட்ட உளவியலாளர், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர் பள்ளியில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி, பள்ளியை மாற்றுவது அவசியம் என்றால், அதை உடனே செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்றில் இருக்கும், கருவை அழிக்க வேண்டாம் என்று விரும்பினால், குழந்தை பராமரிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை