ராஜ்யசபா எம்.பி., பதவி: சதானந்த கவுடா விருப்பம்
மைசூரு: ' 'நானும் கூட ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்க்கிறேன். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகியுள்ளேன். மேலிடம் எ னக்கு ராஜ்யசபா உறுப்பினர் அல்லது வேறு எந்த பதவி கொடுத்தாலும் நிர்வகிப்பேன்,'' என பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா தெரிவித்தார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இடம் காலியாகிறது. நானும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எதிர்பார்க்கிறேன். யாரை களமிறக்க வேண்டும் என்பதை, கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். என் விருப்பத்தை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். நான் தேர்தல் அரசியலில் இருந்து, விலகியுள்ளேன். எனவே எனக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியோ அல்லது வேறு எந்த பொறுப்பு கொடுத்தாலும், சிறப்பாக நிர்வகிப்பேன். மாநில பா.ஜ., தலைவரை மாற்றுவது குறித்து, எங்கள் கட்சி மேலிடம் ஆலோசிக்கவில்லை. தற்போதைய தலைவரின் பதவி காலம், இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளன. இன்னும் ஓராண்டில் அவரது பதவி காலமே முடியும். பல இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முயற்சிப்போம். கர்நாடக மக்கள் தன்னிடம் கொடுத்த பொறுப்பை, நிர்வகிக்க முடியாமல் மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. எஸ்.ஐ.ஆர்., பற்றி பொய்யான வதந்தி பரப்புகிறது. காங்கிரஸ் அரசின் ஹிந்துவுக்கு எதிரான செயல்பாட்டால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்போது சட்டசபை தேர்தல் நடந்தாலும், காங்கிரஸ் 50 தொகுதிகளிலும் வெற்றி பெறாது. சர்வதேச மார்க்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. ஆனால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல், மத்திய அரசு பார்த்து கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.