பீன்யா மேம்பாலத்தில் சீரமைப்பு பணி தீவிரம்; டிசம்பரில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி?
பெங்களூரு : பெங்களூரில் இருந்து கர்நாடகாவின் 21 மாவட்டங்களை இணைக்கும், பீன்யா மேம்பாலத்தில் கேபிள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து அனைத்து வாகனங்களும் செல்ல, நெடுஞ்சாலை துறை அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. பெங்களூரு நகரின் துமகூரு சாலையில், கோரகுண்டேபாளையா சந்திப்பில் இருந்து பார்லேஜி தொழிற்சாலை வரை 4.20 கி.மீ., துாரத்திற்கு, பீன்யா மேம்பாலம் உள்ளது. பெங்களூரில் இருந்து பாகல்கோட், பல்லாரி, பெலகாவி, பீதர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தட்சிண கன்னடா, தாவணகெரே, தார்வாட், கதக், ஹாசன், கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், ஷிவமொக்கா, துமகூரு, உடுப்பி, உத்தர கன்னடா, விஜயநகரா, யாத்கிர், விஜயபுரா என 21 மாவட்டங்களை இந்த மேம்பாலம் இணைக்கிறது. நகரின் முக்கியமான மேம்பாலம் என்பதால், எந்த நேரம் பார்த்தாலும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். குறிப்பாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலையும், இந்த மேம்பாலத்தின் மேல் செல்கிறது. தடை விதிப்பு இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம், மேம்பாலத்தில் வாகனங்கள் சென்ற போது குலுங்க ஆரம்பித்தது. இதுகுறித்து வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலை துறையினர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட போது 8வது மைல் சந்திப்பு பகுதியில், மேம்பாலத்தை இணைக்கும் 102, 103 துாண்களின் கேபிள்கள் வளைந்திருப்பது தெரியவந்தது. இந்திய அறிவியல் நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். ஏராளமான கனரக வாகனங்கள் செல்வதால், கேபிள்கள் வளைந்து உள்ளதை கண்டுபிடித்தனர். பாலத்தில் உள்ள 120 துாண்களை இணைக்கும் 1,200 கேபிள்களை புதிதாக பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, மேம்பாலத்தில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மேம்பாலத்தில் புதிய கேபிள்களை பொருத்தும் பணி நடந்தது. மேம்பாலத்தில் செல்ல முடியாமல், இணைப்பு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆறு முதல் ஏழு கி.மீ., வரை வாகனங்கள் தினமும் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், துாண்களுக்கு இடையில் கேபிள்களை பொருத்தும் பணியை, நெடுஞ்சாலை துறையும் விரைவாக கையாண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 800க்கும் மேற்பட்ட கேபிள்கள் பொருத்தப்பட்ட நிலையில், பாலத்தில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2 மாதம் இந்நிலையில், தற்போது துாண்களுக்கு இடையில் 1,000 கேபிள்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்று உள்ளது. மீதமுள்ள 200 கேபிள்களை இன்னும் இரண்டு மாதத்தில் முடித்து விடுவோம் என்று, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். பணிகள் முடிந்த பின், பாரம் ஏற்றிய லாரிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும். இந்த சோதனை வெற்றி அடைந்தால், டிசம்பர் மாதத்தில் இருந்து அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும் மேம்பாலத்தின் பாதுகாப்புக்காக, ஆன்டி கார்போஷேசன் பெயின்ட் எனும் கார்பனேற்ற எதிர்ப்பு வண்ணம் அடிக்கவும், நெடுஞ்சாலை துறை முடிவு செய்து உள்ளது. இந்த பெயின்ட் அடிப்பதன் மூலம் கேபிள்கள் துருப்பிடிப்பதும், பாலத்தில் துாசி குவிவதும் தடுக்கப்படும்.