இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் பெற்றோர், உதவியாளர்களுக்கு ஓய்வறை
பெங்களூரு: பெங்களூரின் இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில், சிறார்களின் பெற்றோர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வறை கட்ட, மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சஞ்சய் கூறியதாவது: சிறார்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில், இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை பிரசித்தி பெற்றுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், சிறார்களை சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர். சிறார்களுடன் வரும் உதவியாளர்களின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் நாட்கள் வரை, அவர்களின் பெற்றோர், உதவியாளர்களுக்கு தங்கும் வசதி செய்து தருவது, பெரும் சவாலாக உள்ளது. தற்போது மருத்துவமனை பக்கத்தில் உள்ள கட்டடம் ஒன்றில், ஆண் உதவியாளர்கள், மருத்துவ மாணவியர் தங்கும் விடுதியில், மகளிர் உதவியாளர்களுக்கும் தங்கும் வசதி செய்யப்படுகிறது. ஆண் உதவியாளர்கள், மருத்துவமனை வளாகத்தில், காலி இடங்களில் ஓய்வெடுக்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோர் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே. அனைவருக்காகவும் ஓய்வறை கட்ட வேண்டியுள்ளது. இந்திரா காந்தி மருத்துவமனை வளாகத்தில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது. இம்மருத்துவமனை திறக்கப்பட்ட பின், இங்கு கூடுதலாக 450 படுக்கை வசதி கிடைக்கும். இரண்டு மருத்துவமனைகளிலும் படுக்கை எண்ணிக்கை 900ஆக அதிகரிக்கும். அப்போது சிகிச்சைக்கு வரும் சிறார்கள், உதவியாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே மருத்துவமனை நிர்வாகம் தன் வருவாயில் இருந்து, தனிக் கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்படும். இதற்காக டெண்டர் அழைத்துள்ளோம். டெண்டர் பெறும் நிறுவனம் ஆறு மாதங்களுக்குள், பணிகளை முடிக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்படும். கட்டுமான பணிக்கு 3.6 கோடி ரூபாய் செலவிடப்படும். ஒரு மாடியில் பெண்களுக்கும், மற் றொரு மாடியில் ஆண்களுக் கும் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாடியிலும் 50க்கும் மேற்பட்டோர் தங்கலாம். இரண்டு மாடிகளிலும் சமையல் அறை, சுத்தமான குடிநீர், துணி துவைக்கும் இயந்திரம், லாக்கர், கழிப்பறை, 'டிவி' உட்பட அனைத்து வசதிகளும் இருக்கும். வரும் நாட்களில் மேலும் நான்கு மாடிகள் கட்டப்படும். மருத்துவமனை வருவாயில் ஓய்வறை கட்டப்படுவதால், நிர்ணயித்த தேரத்தில் பணிகள் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.