சிறையில் கம்பி எண்ணும் மகன் சட்டசபைக்கு வராத ரேவண்ணா
பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில், முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா ஆயுள் தண்டனைக்கு ஆளானதால், தர்ம சங்கடத்தில் தவிக்கும் அவரது தந்தை ரேவண்ணா, சட்டசபைக்கு வருவதை தவிர்த்துள்ளார். ஆகஸ்ட் 11ம் தேதி முதல், கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டம் துவங்கியது. இதில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா பங்கேற்கவில்லை. ஆளுங்கட்சியான காங்கிரசை எதிர்கொள்ளும் திறன் கொண்ட தலைவர்களில், ரேவண்ணாவும் ஒருவர். சட்டசபையில் அரசை நெருக்கடியில் சிக்க வைப்பதில் வல்லவர். முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சராகி தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா உட்பட மூத்த தலைவர்கள் சிலரும் கட்சிக்கு பக்கபலமாக இல்லை. இதனால் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் வருத்தத்தில் உள்ளனர். இதற்கிடையே ரேவண்ணாவும், சட்டசபைக்கு வராமல் ஒதுங்கி நின்றுள்ளார். அவரது மகன் பிரஜ்வல், பாலியல் பலாத்கார வழக்கில், ஆயுள் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து, மகனை மீட்க அதிகபட்சமாக போராடியும், தண்டனையில் இருந்து தப்ப முடியவில்லை. மகனின் நிலையால் மனம் நொந்துள்ள ரேவண்ணா, சட்டசபைக்கு வரவில்லை. ஹாசனில் நடந்த மாரடைப்பு இறப்புகள் குறித்து, சட்டசபையில் கேள்வி எழுப்ப நினைத்திருந்தார். ஆனால் கேள்வி எழுப்ப சட்டசபையில், அவரே இல்லை. இதனால் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் வருத்தத்தில் உள்ளனர். வரும் நாட்களிலாவது ரேவண்ணா சட்டசபைக்கு வருவார் என, எதிர்பார்க்கின்றனர்.