சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோடிக் தொழில்நுட்பம்
பெங்களூரு: கழிவுநீர் செல்லும் சாக்கடைகளை சுத்தம் செய்ய, 'ரோபோடிக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த, பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கழிவுநீர் செல்லும் சாக்கடைகளை பராமரிப்பது, குடிநீர் வாரியத்துக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், தண்ணீர் செல்வது தடைபடும். சாலைகளில் கழிவுநீர் பாய்ந்து, மக்கள் பாதிப்படைகின்றனர். சாக்கடைகளை சுத்தம் செய்ய, துப்புரவு தொழிலாளர்கள் இறங்குவதால் அசம்பாவிதம் ஏற்படுகிறது. சாக்கடைகளில் சுத்தம் செய்ய சென்று, மூச்சுத்திணறி இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. நகரின் வளர்ச்சிக்கு தகுந்தபடி, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்த வேண்டும். சாக்கடைகளை சுத்தம் செய்ய, நாட்டின் திருவனந்தபுரம், சென்னை, கோவை, ஹைதராபாத் உட்பட சில நகரங்களில் 'ரோபோடிக்' தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றன. திருவனந்தபுரம் இந்தியாவில் முதன் முறையாக, திருவனந்தபுரம் செயல்படுத்தியது. அதன்பின் மற்ற நகரங்கள் பயன்படுத்த ஆரம்பித்தன. இதுபோன்று பெங்களூரிலும் 'ரோபோடிக்' தொழில்நுட்பம் பயன்படுத்த குடிநீர் வாரியம் திட்டம் வகுத்துள்ளது. பெங்களூரு குடிநீர் வாரியம், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை அளித்துள்ளது. 3.19 லட்சம் சாக்கடைகளை நிர்வகிக்கிறது. இவற்றை சுத்தம் செய்ய, 'ரோபோடிக்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். நகரில் புதிய லே - அவுட்டுகள் அமைக்கப்படுவதால், புதிதாக குடிநீர் இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பலரும் மழைநீரை, சாக்கடையில் கலக்க விடுகின்றனர். இது சாக்கடைகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக தண்ணீர் பெருக்கெடுத்து, கழிவுநீர் சாலைகளில், குடியிருப்புகளில் பாய்ந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது. குறுகலான இடம் சாக்கடைகளை சுத்தம் செய்ய, ஏற்கனவே பல இயந்திரங்கள் இருந்தாலும், இவை அவ்வளவாக பயன் அளிக்கவில்லை. குறுகலான இடங்களில், இந்த இயந்திரங்களால் செயல்பட முடிவது இல்லை. இயந்திரங்களை கொண்டு செல்வதால், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு ரோபோடிக் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். சாக்கடைகளின் உட்பகுதியில், குறைவான வெளிச்சம் இருந்தாலும், ரோபோடிக் தொழில்நுட்பம் செயல்படும். மற்ற இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களிலும், ரோபோடிக் இயந்திரங்கள் வேகமாக, சாக்கடைகளை சுத்தம் செய்யும். இந்த இயந்திரங்கள் கம்ப்யூட்டர் மூலமாக இயங்கும். திடீரென அதிக விலை கொண்ட ரோபோடிக் இயந்திரங்கள் வாங்குவது கஷ்டம். முதலில் நிறுவனங்கள் மூலம் ரோபோடிக் தொழில்நுட்பம் உதவி பெறப்படும். இதற்காக டெண்டர் அழைத்துள்ளோம். வரும் நாட்களில், ரோபோடிக் உபகரணங்களை விலைக்கு வாங்க, குடிநீர் வாரியம் ஆலோசிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.