ஆம்னி பஸ்சில் கடத்திய ரூ.1 கோடி பறிமுதல்
கார்வார்: கோவாவில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பஸ்சில் கடத்திய, 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது; இருவர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா - கோவா மாநில எல்லையில், கார்வார் அருகே மஜாலி கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, சிட்டகுலா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக கோவாவில் இருந்து பெங்களூரு செல்லும் ஆம்னி பஸ் வந்தது. டிக்கியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த பைகளை, போலீசார் சோதனை செய்தனர். இரு பைகளில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த பைகளை கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தின் கல்லேஷ் குமார், பம்ரு குமார் கைது செய்யப்பட்டனர். பணத்திற்கான ஆவணங்களை கேட்டபோது, அவர்களிடம் இல்லை. பெங்களூரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைக்கு சொந்தமானது என்று கூறினர். ஆவணம் இல்லாததால் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உண்மையிலேயே பணம் எலக்ட்ரிக்கல் கடைக்கு சொந்தமானதா, சட்டவிரோத பரிவர்த்தனையா அல்லது அரசியல் பிரமுகர்களுக்கு உரியதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.