உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தேவனஹள்ளியில் 4வது ரயில்வே முனையம் இறுதி ஆய்வுக்கு ரூ.1.35 கோடி ஒதுக்கீடு

தேவனஹள்ளியில் 4வது ரயில்வே முனையம் இறுதி ஆய்வுக்கு ரூ.1.35 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரு நகரில் ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள நெரிசலை போக்க, பெங்களூரு தேவனஹள்ளியில் நான்காவது ரயில்வே முனையம் அமைப்பது தொடர்பாக, நிலம் ஆய்வு செய்ய 1.35 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

5 வது இடம்

நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மெட்ரோபாலிடன் நகரில், பெங்களூரு ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெங்களூரில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், விஸ்வேஸ்வரய்யா முனையம் என்று மூன்று ரயில் முனையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் மொத்தம் 12 'பிட் லைன்கள்' எனும் ரயில்களை சுத்தம் செய்யவும், பராமரிக்கவும், பழுது சரி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.மூன்று ரயில் நிலையங்களிலும், தினமும் 140 ரயில்கள் புறப்படுகின்றன; 139 ரயில்கள் நிற்கின்றன; 142 ரயில்கள் இவ்வழியாக கடந்து செல்கின்றன. 2024 - 25ல், இந்த ரயில் நிலையங்களில் 21.2 கோடி பயணியர் வந்து சென்றுள்ளனர். வரும் நாட்களில் இந்த ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் எண்ணிக்கை 210 ஆக உயரும் என தென்மேற்கு ரயில்வே எதிர்பார்க்கிறது.பிட் லைன்களில் ரயில்கள் நிற்பதால், மற்ற ரயில்களின் வந்து, செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. அத்துடன், கூட்ஸ் ரயில்களும் இயக்குவதால், பயணியர் ரயில்கள் பாதிக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, நான்காவது முனையம் அமைக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்தது.

4வது முனையம்

இதற்காக, எலஹங்கா - தேவனஹள்ளி - சிக்கபல்லாபூரை காரிடாராக வைத்து, 1,000 ஏக்கரில் தேவனஹள்ளியில் நான்காவது ரயில்வே முனையம் அமைக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இங்கு 16 பிளாட்பார்ம்கள், 12 பிட் லைன்கள்; 5 சுத்தம் செய்யும் லைன்கள்; 24 ஸ்டேபிளிங் லைன்கள்; 6 பழுது பார்க்கும் லைன்கள்; 6 பழுது பார்க்கும் இடத்துக்கு கொண்டு செல்லும் சிக் லைன்கள்; நிர்வாக கட்டடம், ஸ்டோர் அறை, தினமும் 36 ரயில்களை பராமரிக்கும் வகையில் அமைய உள்ளன.இதற்காக மத்திய ரயில்வே அமைச்சகத்திடம், தென்மேற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது. இதை பரிசீலித்த அமைச்சகம், எப்.எல்.எஸ்., எனும் இறுதி இடம் ஆய்வு பணியை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக 1.35 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ