மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாத வீடுகளில் ரூ.32 கோடி அபராதம் வசூல்
பெங்களூரு: மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாததால், கடந்த ஆண்டில் பெங்களூரு நகரவாசிகளிடம் இருந்து 32 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரு மாநகராட்சி வரம்பிற்குள் 2,400 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட அளவில் உள்ள நிலங்களில் தற்போது உள்ள கட்டடங்கள், வீடுகள் மற்றும் 1,200 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட இடங்களில் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்ற உத்தரவு, கடந்த 2009ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.ஆனால் நகரில் பெரும்பாலானோர் இன்னும் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டவில்லை. அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.கடந்த 2023ம் ஆண்டு 21 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 32.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:நகரில் தண்ணீர் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரில் இருந்து 100 கி.மீ., துாரத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கான நடைமுறை கடினமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வீடுகள், கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்ட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளோம்.தற்போது நகரில் 11.09 லட்சம் வீடுகளுக்கு காவிரி நீர் வழங்கப்படுகிறது. இதுவரை 2.08 லட்சம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூருக்கு ஆண்டுக்கு 19 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் கடைப்பிடித்தால், நகரத்திலேயே 15 டி.எம். சி., தண்ணீர் கிடைக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். மழை நீரை சேகரிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் பொதுமக்கள் அக்கறை இன்றி உள்ளனர். அபராதம் செலுத்தி விட்டு அமைதியாக இருந்து விடுகின்றனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.