ரூ.117 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் எரிப்பு
பெங்களூரு: போலீசார் பறிமுதல் செய்த, 117 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை, அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது: போலீசார் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் நீதிமன்றத்தில், மூன்று வழக்குகள் தொடர்பான விசாரணை முடிந்துள்ளது. எனவே, 2,086 கிலோ போதைப்பொருட்களை, சட்டப்படி அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி பெங்களூரு, துமகூரு சாலையின், தாபஸ்பேட்டில் உள்ள கர்நாடக வேஸ்ட் மேனேஜ்மென்ட் மையத்தில், நேற்று போதைப்பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதன் மதிப்பு, 117 கோடி ரூபாய். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், எந்த காரணத்தை கொண்டும், பொதுமக்களின் கைகளுக்கு மீண்டும் கிடைக்க கூடாது. இதை மனதில் கொண்டு, நீதிமன்ற உத்தரவுப்படி தாமதமின்றி அழிக்கிறோம். போதைப்பொருள் கடத்துவது, விற்பது குறித்து தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக உதவி எண் 1933ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்போரின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிவிப்போருக்கு ரொக்கம் பரிசளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.