ரூ.100 கோடி மோசடி வழக்கு மாஜியின் உறவினரிடம் விசாரணை
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருதல் உள்ளிட்ட செயல்களுக்கு, 100 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்த புகார் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் உறவினரான, கார்த்திக்கிடம், ஏழு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. தி.மு.க.,வின் செய்தி தொடர்புக் குழு துணைத் தலைவரான அரசகுமார், 58, என்பவர், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருதல் உள்ளிட்ட செயல்களுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி, மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து, சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, அரசகுமார் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த மகேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக, மகேஷிடம் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி, வாக்கு மூலம் பெற்றனர். இதையடுத்து, கார்த்திக், 45, என்பவருக்கு 'சம்மன்' அனுப்பினர். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், நேற்று ஆஜரானார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள், ஏழு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.