உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காவிரி குடிநீரை வீணடித்தால் ரூ.5,000 அபராதம்

 காவிரி குடிநீரை வீணடித்தால் ரூ.5,000 அபராதம்

பெங்களூரு: கோடை காலத்தில் காவிரி குடிநீரை, வாகனங்களை கழுவுவதற்கு மற்றும் தேவையின்றி வீணாக்கினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. கர்நாடகாவில், மார்ச் மாதத்தில் கோடை காலம் துவங்கும். இந்நேரத்தில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரின் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மே மாதத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும். இம்முறை அத்தகைய சூழ்நிலை ஏற்படாத வகையில், பெங்களூரு குடிநீர் வாரியம், பற்றாக்குறை ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு, 'மினி குடிநீர் டேங்கர்கள்' நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் கே.ஆர்.எஸ்., அணையில் தற்போது 41.02 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில், பெங்களூருக்கு மட்டும் ஜூன் வரை 14 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும். அதுதவிர, பெங்களூருக்கு போர்வெல் குடிநீரும் முக்கிய பங்கு வகிக்கிறது. கோடை காலத்தில் போர்வெல்களில் குடிநீர் குறையும். கடந்தாண்டில் இருந்து நகரின் போர்வெல்களை குடிநீர் வாரியம் பராமரித்து வருகிறது. நிலத்தடி நீர் குறைவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளது. இம்முறையும், காவிரி நீரில் பைக்குகள், கார்களை கழுவுவதற்கும், தேவையின்றி தண்ணீரை வீணாக்குவதற்கும் அபராதம் விதிக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, கண்காணிப்பாளர்கள், 'புளு போர்ஸ்' ஆகியவற்றை அமைத்து உள்ளது. 'அத்தியாவசிய குடிநீரை வீணாக்காமல், அதை முறையாக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், தண்ணீர் பற்றாக்குறை குறையும். குடிநீர் வாரியத்தின் உத்தரவுகளை மீறி, காவிரி நீரை வாகனங்கள் கழுவுவதை, கண்காணிப்பாளர்கள், புளு போர்ஸ் கண்டுபிடித்தால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை