ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் மேல்சபையில் கடும் வாக்குவாதம்
பெங்களூரு; அரசியல் சாசனத்தை பற்றி அவப்பிரசாரம் மற்றும் அம்பேத்கரை தோற்கடித்த விஷயம் ஆகியவை, மேல்சபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, காரசார வாக்குவாதத்துக்கு காரணமானது.மேல்சபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:காங்., - சுதாம் தாஸ்: மத்திய அரசால் எஸ்.சி., எஸ்.டி., சமுதாயத்தினருக்கு அநியாயம் நடக்கிறது.திட்ட ஆணையம் இருந்தபோது, இந்த சமுதாயங்களுக்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்க வேண்டும் என தெரிவித்த ஆலோசனைகளை மத்திய அரசு பின்பற்றும் சூழ்நிலை இருந்தது.ஆனால் மத்திய அரசு, திட்ட ஆணையத்தின் பெயரை, 'நிதி ஆயோக்' என, மாற்றிய பின், இதன் செயல் திறனும் மாறியது. எஸ்.சி., சமுதாய முன்னேற்றத்துக்கு, நிதி ஆயோக் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாக இருக்காது.அப்போது எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இரு தரப்பினரும் எழுந்து நின்று, 'நீங்கள் அரசியல் சாசனம் மற்றும் அம்பேத்கர் பற்றி, நீங்கள் அவபிரசாரம் செய்கிறீர்கள்' என, பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.பரஸ்பரம் விமர்சனம், கூச்சல், குழப்பம், வாக்குவாதம் என, அரைமணி நேரம் கடந்தது.எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயண சாமி: அரசியல் சாசனம் மற்றும் அம்பேத்கரை பற்றி காங்கிரஸ் அவப்பிரசாரம் செய்கிறது. அம்பேத்கருக்கு துரோகம் செய்தனர்.இவரது பேச்சுக்கு, ஆளுங்கட்சியின் போசராஜு, அமைச்சர் பிரியங்க் கார்கே, உறுப்பினர்கள் புட்டண்ணா, ஹரிபிரசாத் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.பா.ஜ., உறுப்பினர்கள் ரவிகுமார், அருண், நவீன் உட்பட, பலர் சலவாதி நாராயணாவுக்கு ஆதரவாக நின்றனர்.இரண்டு தரப்பினரும், உரத்த குரலில் குற்றஞ்சாட்டியதால், சபையில் குழப்பமான சூழ்நிலை உருவானது. யார் என்ன பேசுகின்றனர் என்பதே கேட்கவில்லை.சூழ்நிலை கட்டுப்பாடு இல்லாமல் சென்றதால், இயலாமையில் சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மவுனமானார். “குழப்பமான சூழ்நிலையில் உறுப்பினர்கள் பேசியதை, ஆவண கோப்பில் சேர்க்க வேண்டாம்,” என, அவர் உத்தரவிட்டார்.ஆளுங்கட்சியின் நாகராஜ், மேல்சபை தலைவர் இருக்கைக்கு முன் சென்று பேசியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் வாக்குவாதம் செய்தனர். பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.சிறிது நேரத்துக்கு பின், சூழ்நிலை தானாகவே சரியானது.சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: எதிர்க்கட்சித் தலைவர், மனம் போனபடி பேசக்கூடாது. ஆளுங்கட்சித் தலைவர், தங்கள் உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டும். அதே போன்று எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டும். என் சகிப்பு தன்மைக்கும் ஒரு எல்லை உள்ளது. இப்படியே நீடித்தால் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டி வரும்.அதன்பின் சுதாம் தாசுக்கு பேச வாய்ப்பளித்தார். ஆனால் உறுப்பினர்களின் கூச்சலால், அவரால் பேச முடியவில்லை. அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சந்தர்ப்பத்தில், காங்கிரசின் புட்டண்ணா பயன்படுத்திய ஒரு வார்த்தை, சலவாதி நாராயணசாமியை சீண்டியது. புட்டண்ணாவை சபையில் இருந்து வெளியேற்றும்படி வலியுறுத்தினார்.பா.ஜ., உறுப்பினர்களுடன், சபை தலைவரின் இருக்கைக்கு முன் சென்று தர்ணா நடத்தினார். அப்போது பசவராஜ் ஹொரட்டி, புட்டண்ணா பேசிய வார்த்தையை கோப்புவில் இருந்து நீக்குவதாக கூறினார்.ஆனாலும் எதிர்க்கட்சியினர் சமாதானம் ஆகவில்லை. தர்ணாவை தொடர்ந்தனர்.அப்போது புட்டண்ணா, “நான் ஆட்சேபத்துக்குரிய வார்த்தையை பயன்படுத்தவில்லை. இத்தகைய பழக்கம் என்னிடம் இல்லை,” என விளக்கம் அளித்தார்.அப்போதும் எதிர்கட்சியினர் தர்ணாவை கைவிடவில்லை. இதை பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினர் பேச துவங்கியதால், மீண்டும் இரு தரப்பினருக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது.இதனால் கூட்டம் சிறிது நேரம், கூட்டத்தை தள்ளிவைக்கப்பட்டது.