உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ.,வில் தலித் தலைவராக உருவெடுக்க தடாலடியாக பேசும் சலவாதி நாராயணசாமி

பா.ஜ.,வில் தலித் தலைவராக உருவெடுக்க தடாலடியாக பேசும் சலவாதி நாராயணசாமி

பெங்களூரு : கர்நாடக பா.ஜ.,வில் தலித் சமூக தலைவராக உருவெடுக்கும் வகையில், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தடாலடியாக பேசி வருகிறார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குடும்பத்திற்கு எதிராக, அரசியல் செய்ய ஆரம்பித்து உள்ளார்.கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக சலவாதி நாராயணசாமி, கடந்த 2024 ம் ஆண்டு ஜூலை மாதம் 29 ம் தேதி நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், முன்பு காங்கிரசில் இருந்தவர். கடந்த 2022ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்தார். கடந்த 2023ல் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் எம்.எல்.சி., ஆனார். முதல்முறை எம்.எல்.சி., என்றாலும், கட்சியில் சேர்ந்த இரண்டு ஆண்டில் அவருக்கு, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது.

குற்றச்சாட்டு

இந்த பதவி கிடைத்த போது, கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ., மேலிடம் நியமித்தது. ஆனால் பதவி கிடைத்த போது, அரசுக்கு எதிராக பெரிய அளவில் எந்த போராட்டமும் நடத்தவில்லை. இதனால் அவர் மீது கட்சியின் சில தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினர்.இதையடுத்து, சுதாரித்து கொண்ட சலவாதி நாராயணசாமி, அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தினர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அவரது மகனான அமைச்சர் பிரியங்க் கார்கேயை விமர்சித்து அரசியல் செய்து வருகிறார். இதுதவிர காங்கிரசில் உள்ள தலித் அமைச்சர்கள் பரமேஸ்வர், மஹாதேவப்பா ஆகியோரையும் நேரம் கிடைக்கும் போது விமர்சிக்கிறார்.

சக்கர நாற்காலி

கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஊழல் செய்ததால் தான் சக்கர நாற்காலியில் வரும் நிலைக்கு, முதல்வர் தள்ளப்பட்டார் என்று கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.காங்கிரசில் இருப்பது போன்று பா.ஜ.,வில் வலுவான தலித் தலைவர்கள் யாரும் இல்லை. கொள்ளேகால் முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ், தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வந்ததால், அவருக்கு கட்சியில் இன்னும் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.,வில் வலுவான தலித் தலைவராக உருவெடுக்கும் வகையில், சலவாதி நாராயணசாமி தடாலடியாக பேசி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை