உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொலையான கிருத்திகா பெயரில் ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்

கொலையான கிருத்திகா பெயரில் ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்

பெங்களூரு: கொலை செய்யப்பட்ட டாக்டர் கிருத்திகா ரெட்டி பெயரில், ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க முடிவு செய்து உள்ளதாக, கிருத்திகாவின் தாய் சவுஜன்யா கூறி உள்ளார். பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் கிருத்திகா ரெட்டி, 28. டாக்டர். விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றினார். இவரது கணவர் மகேந்திர ரெட்டி. இவரும் டாக்டர். கடந்த ஏப்ரல் 23 ம் தேதி கிருத்திகா ரெட்டி இறந்தார். அளவுக்கு அதிகமாக அவரது உடலுக்குள் மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக, சம்பவம் நடந்து ஆறு மாதத்திற்கு பின், மகேந்திர ரெட்டி கடந்த 15 ம் தேதி கைது செய்யப்பட்டார். 'சைலன்ட் கில்லர்' இந்நிலையில் கிருத்திகா ரெட்டியின் தாயான வக்கீல் சவுஜன்யா, நேற்று அளித்த பேட்டி: எனது மகள் கிருத்திகாவின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவருக்கு எந்த உடல்நிலை பிரச்னையும் இல்லை. படிப்பில் சிறந்து விளங்கினார். எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்பில் முதலிடம் பிடித்தார். அவரிடம் நான்கு மருத்துவ டிகிரி உள்ளது. சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்று கனவு கண்டார். என் மகளுடன் வாழ பிடிக்கவில்லை என்றால், மகேந்திர ரெட்டி எங்களிடம் கூறி இருக்கலாம். அதைவிட்டு கொலை செய்து உள்ளார். கிருத்திகாவை கொன்ற பின், துளியும் சந்தேகம் வராத மாதிரி, எங்களிடம் நடந்து கொண்டார். கிருத்திகா இறந்ததும் நாங்கள் வசித்த வீட்டை, இஸ்கானுக்கு கொடுத்து விட்டோம். வீட்டை காலி செய்த போது அங்கு வந்த மகேந்திர ரெட்டி, கிருத்திகாவின் நினைவாக அவரது உடைமைகளை எடுத்து செல்கிறேன் என்று கூறி, சில பொருட்களை எடுத்து சென்றார். அவரை நினைத்து வருத்தப்பட்டோம். ஆனால் அவர் சைலன்ட் கில்லராக இருந்து உள்ளார். பசு முகத்தில் புலி உறவினர்கள் மூலம் மகேந்திர ரெட்டியின் குடும்பத்தின் அறிமுகம் கிடைத்தது. டாக்டராக உள்ளார், நல்ல பையன் என்று நினைத்து மகளை திருமணம் செய்து கொடுத்தோம். திருமணத்திற்கு பின், மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது கிருத்திகாவின் ஆசையாக இருந்தது. நாங்கள் வேண்டாம் என்று கூறினோம். தற்போது அவரது பெயரில் மருத்துவமனை துவங்க உள்ளோம். ஏழை மாணவர்களுக்கு கிருத்திகா பெயரில், ஸ்காலர்ஷிப் வழங்கவும் முடிவு செய்து உள்ளோம். மகேந்திர ரெட்டிக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும். இந்த வழக்கிற்காக சிறப்பு வக்கீலை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு, கோரிக்கை வைக்கிறேன். உயிரை காப்பாற்ற வேண்டியவரே, உயிரை எடுத்தால் என்ன செய்வது. ஒருவர் செய்யும் தவறால் அனைத்து டாக்டர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மகேந்திர ரெட்டியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அவர் மூலம் மயக்க மருந்து வாங்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இந்த சமூகத்தில் பசு முகம் கொண்ட புலிகள் இருக்கின்றனர். அவர்களால் பெண்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும். பெற்றோர் தங்கள் மகள்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; சொந்த காலில் நிற்கும் தைரியம் தர வேண்டும்; அதற்கு பின் திருமணம் செய்து வைக்க வேண்டும். இப்படி இருந்தால் தான் கணவர் வீட்டில் ஏதாவது பிரச்னை என்றால், பெண்களால் துணிந்து முடிவு எடுக்க முடியும். கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது, நானும் உடன் இருப்பேன் என்று மகேந்திர ரெட்டி அடம் பிடித்தார். சாட்சிகளை அழிக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை