மாணவர்களை வரவேற்க தயாராகும் பள்ளிகள்
பெங்களூரு: கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளி திறக்கப்படுகிறது. சிறார்களை சிறப்பாக வரவேற்க பள்ளிகள் தயாராக உள்ளன. கர்நாடகாவில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. புதிய கல்வியாண்டின் முதல் நாளன்று பள்ளிக்கு வரும் சிறார்க ளுக்கு, ரோஜாப்பூ கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், சிறார்கள் மனம் மகிழும் வகையில், பண்டிகை சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து பள்ளி நிர்வாகங்களும், சிறார்களை வரவேற்க தயாராக உள்ளன. பள்ளிகளின் நுழைவாசல், வகுப்பறைகள் மலர்கள், மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, விழாக்கோலம் இன்று மதிய உணவில், இனிப்பு சேர்க்கப்படும். பாயசம் அல்லது கேசரிபாத் வழங்கப்படவுள்ளது. கல்வித்துறை உத்தரவுபடி, இன்று பெற்றோர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடக்கவுள்ளது.