உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வேலைக்கார பெண்ணுடன் தகாத உறவு: கணவரை கொன்ற 2வது மனைவி கைது

வேலைக்கார பெண்ணுடன் தகாத உறவு: கணவரை கொன்ற 2வது மனைவி கைது

சுத்தகுண்டேபாளையா: வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால், கட்டையால் அடித்து கணவரை கொன்ற 2வது மனைவி கைது செய்யப்பட்டார். குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக, நாடகமாடியது, அம்பலமாகி உள்ளது.பெங்களூரு, சுத்தகுண்டேபாளையாவில் வசித்தவர் பாஸ்கர், 41. தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் மனைவியை விவாகரத்து செய்தார்.பத்து ஆண்டுக்கு முன்பு ஸ்ருதி, 39, என்பவரை, இரண்டாவது திருமணம் செய்தார். தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.கடந்த 1ம் தேதி இரவு 11:30 மணிக்கு, சுத்தகுண்டேபாளையா போலீஸ் நிலைய டெலிபோன் எண்ணுக்கு பேசிய ஸ்ருதி, குடிபோதையில் இருந்த கணவர் குளியல் அறையில் தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து இறந்ததாக கூறினார். அங்கு சென்ற போலீசார், பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

முகத்தில் காயம்

பிரேத பரிசோதனை அறிக்கையில், பாஸ்கர் முகத்தில் பலமாக தாக்கப்பட்ட காயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் நேற்று ஸ்ருதியிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவர் முகத்தில் மரக்கட்டையால் அடித்துக் கொன்றதை ஸ்ருதி ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.பாஸ்கர் வீட்டில் 35 வயது பெண் ஒருவர் வீட்டு வேலை செய்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவருக்கு, பாஸ்கர் பண உதவி செய்துள்ளார். நாளடைவில் அவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ருதி வீட்டில் இல்லாத நேரம், வேலைக்காரப் பெண்ணுடன், பாஸ்கர் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி ஸ்ருதிக்கு தெரிய வந்தது.

உடலில் ஈர துண்டு

கணவரிடம் தகராறு செய்ததுடன், வேலைக்காரப் பெண்ணை வேலையில் இருந்து நிறுத்தினார். ஆனாலும் அந்த பெண்ணுக்கு வாடகை வீடு பார்த்துக் கொடுத்ததுடன், பண உதவியும் பாஸ்கர் செய்து வந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதமாக வீட்டிற்கு செல்லாமல் கள்ளக்காதலி, நண்பர் வீட்டில் பாஸ்கர் வசித்துள்ளார். கடந்த 1ம் தேதி வீட்டிற்கு சென்றபோது, தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.கோபம் அடைந்த ஸ்ருதி, மரக்கட்டையால் பாஸ்கர் முகத்தில் தாக்கி உள்ளார். நிலைகுலைந்த அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.போலீசிடம் இருந்து தப்பிக்க ஸ்ருதி திட்டம் போட்டார். பாஸ்கரை குளிப்பாட்டி ஈரத்துண்டை அவரது உடலில் கட்டித் துாக்கி வந்து, படுக்கையில் போட்டுள்ளார். குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக, போலீசை நம்ப வைத்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம், ஸ்ருதி நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ