ஜாதிவாரி சர்வே பணிகள் திணறும் மூத்த ஊழியர்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் ஜாதிவாரி சர்வேயில் ஏற்படும் சிறிய அளவிலான தொழில்நுட்ப கோளாறுகளை கையாள தெரியாததால் வயதான மூத்த ஊழியர்கள் திணறி வருகின்றனர். கர்நாடகாவில் ஜாதிவாரி சர்வே கடந்த மாதம் 22ம் தேதி முதல் இம்மாதம் 7ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சர்வேயை முடிக்க முடியாததால் வரும் 18ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். பெங்களூரில் சர்வே தாமதமாக துவங்கியதால், கூடுதலாக ஒரு நாள் என, வரும் 19ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பெங்களூரில் மொத்தம், 46 லட்சம் வீடுகள் உள்ளன. சர்வே பணியில் ஆசிரியர்கள், ஆஷா, மாநகராட்சி ஊழியர்கள் என 10,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஊழியருக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 15 வீடுகளில் சர்வே நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நீண்ட நேரம் இதனால், சர்வே பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஊழியர்கள் வீடு, வீடாக சென்று மொபைல் போன்களில் பணிகள் செய்கின்றனர். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றின் விபரங்களை சேகரித்து செல்கின்றனர். இதை செய்வதில் வயதான ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிக்க தெரியாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. இதனால், பலரும் சிரமப்படுகின்றனர். சர்வேயின் போது செயலியில் ஏற்படும் சிறிய அளவிலான தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய தெரியாமல் திணறுகின்றனர். சில வயதான ஊழியர்கள் தங்கள் மகன், மகள், பேரக் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். இது குறித்து சர்வேயில் ஈடுபடும் வயதான ஊழியர்கள் கூறியதாவது: 'டேட்டா' காலி கேட்கப்படும் விபரங்களை உடனடியாக நிரப்பாவிட்டால் மீண்டும் முதலிலிருந்து விபரங்களை நிரப்ப வேண்டும். பழைய 4ஜி மொபைல் போன் உபயோகிப்பதால் பணியில் தொய்வு ஏற்படுகிறது. சில சமயங்களில் மொபைல் 'டேட்டா' தீர்ந்து விடுகிறது. அனைத்து விபரங்களை சரியாக பூர்த்தி செய்யப்பட்ட பிறகும் கூட, தவறாக பதிவு செய்ததாக காண்பிக்கிறது. பெரும்பாலான சமயங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன. இதை இளம் தலைமுறையினர் எளிதில் தீர்த்து விடுகின்றனர். ஆனால், எங்களுக்கு அப்படி செய்ய தெரியவில்லை. சர்வே பணிக்கு செல்லும் வீடுகளில் உள்ள சிறுவர்கள் மொபைலில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து வைக்கின்றனர். ஆனால், எங்களுக்கு அது குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால், சர்வே பணியில் கேட்கும் பல கேள்விகள் குறித்து விளக்கம் அளிக்க தெரியவில்லை. ஒரு வீட்டில் சர்வே பணியை முடிப்பதற்கே பல மணி நேரம் ஆகிறது. ஆனால், அதிகாரிகள் ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து வீடுகளில் சர்வே நடத்த வேண்டும் என கட்டளையிடுகின்றனர். இது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.