உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மேற்கு தொடர்ச்சி மலையில் செட்டள்ளி கிராமம்

மேற்கு தொடர்ச்சி மலையில் செட்டள்ளி கிராமம்

குடகு மாவட்டத்தில் அமைந்துள்ளது செட்டள்ளி கிராமம். மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றிலும் பசுமை போர்த்தியபடி மரங்கள், காபி எஸ்டேட் இடையே இருக்கும் அழகிய கிராமம். மடிகேரி - சித்தாபுரா சாலையில் அமைந்துள்ள இச்சிறிய கிராமம், 609 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுற்றுலா பயணியரை மீண்டும் மீண்டும் வரவழைக்கும் அழகு கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை அழகு, வளைந்த, குறுகிய சாலைகளின் இருபுறமும் உள்ள பனை மரங்கள், செட்டள்ளியில் நெல் பயிர்களின் பசுமையை காணலாம். செட்டள்ளியில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்களும் உள்ளன. இக்கிராம மக்கள், சுற்றுலா பயணியரை, தங்களில் ஒருவராக பார்க்கின்றனர். கிராமத்தில் பின்பற்றப்படும் அவர்களின் பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள அனுமதிக்கின்றனர். மலையேற்றம் செய்பவர்களுக்கும் இது ஏற்ற இடம். பசுமையான காடுகள், பல்வேறு தாவரங்கள், விலங்குகளுக்கு தாயகமாக உள்ளது. அரிய வகை பறவைகள், விலங்குகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இக்கிராமத்துக்கு அக்டோபர், மார்ச் மாதங்களில் செல்வது சிறந்தது. இக்காலகட்டத்தில் வானிலை 'சூப்பராக' இருப்பதுடன், இப்பகுதியின் அழகை ரசிக்கலாம். கோடையில் மலர் விழாக்களை காணலாம். குளிர் காலத்தில் மூடுபனி மலைகள், காபி தோட்டங்கள், குளிர்ந்த வெப்பநிலையின் பேரின்பத்தை அனுபவிக்கலாம்.

எப்படி செல்வது

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மைசூரு விமான நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 108 கி.மீ., தொலைவில் உள்ள செட்டள்ளிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்வோர், மடிகேரி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 16 கி.மீ., தொலைவில் உள்ள செட்டள்ளிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். பசுமை சூழ்ந்த செட்டள்ளி கிராம சாலை. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ