உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / யானைகளை கண்டறிய ஏழு கும்கிகள் திணறல்

யானைகளை கண்டறிய ஏழு கும்கிகள் திணறல்

ஹாசன்: பேலுாரில் சுற்றித்திரியும், 10 ஆண் யானைகளைக் கண்டறிய முடியாமல், ஏழு கும்கி யானைகள் திணறின. ஹாசன் மாவட்டம், பேலுாரில் யானை தாக்கியதில், இரண்டு கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பேலுார் பகுதியில் சுற்றித்திரியும், 10 ஆண் யானைகளைப் பிடிக்கும் பணியில் மைசூரு தசராவில் அம்பாரியை சுமந்த பிரஷாந்த் உட்பட ஏழு கும்கி யானைகள், நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டன. ஆறு குழுக்களாக யானை கூட்டத்தை தேடும் பணி நேற்றும் தொடர்ந்தது. எனினும், காட்டு யானைகள் எங்குள்ளன என்பதையே அறிய முடியாமல் கும்கிகள் திணறின. 'ட்ரோன்' மூலம் தேடியும் யானைகள் தென்படவில்லை. கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மனோஜ்ராஜன் தலைமையில் 50 போலீசார் உட்பட, 400 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது: ஹாசனில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் விரைவில் பிடிக்கப்பட்டு, சிக்கமகளூரின் பத்ரா சரணாலயத்திற்கு மாற்றப்பட உள்ளதாக கூறியிருந்தோம். பத்ரா சரணாலயத்தில் ஏற்கனவே ஏராளமான யானைகள் இருப்பதால், அங்கு மேலும் யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டாம் என சிக்கமகளூரு மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். எனவே, யாருக்கும் தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் யானைகள் இடமாற்றம் செய்யப்படும். இது தொடர்பாக, ஹாசன் மற்றும் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சு நடத்துவேன். நாகரஹொளே வனப்பகுதி அருகில், சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த யானை மீது, ஸ்கூட்டரில் வந்த இருவர் வேண்டுமென்ற கற்களை வீசி தாக்கும் வீடியோ, எனது கவனத்திற்கு வந்தது. யானையை தாக்கிய இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நபர்களின் வாகன எண்ணின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி