உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் சித்துவை வீழ்த்த சிவகுமார் சூழ்ச்சி

 முதல்வர் சித்துவை வீழ்த்த சிவகுமார் சூழ்ச்சி

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை பறிக்க, துணை முதல்வர் சிவகுமார் புது சூழ்ச்சியை கையாண்டு உள்ளார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மடாதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி, தனக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டு உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 'அஹிந்தா' எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்று, தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார். தனது பதவிக்கு ஏதாவது பிரச்னை வருவது போன்று தெரிந்தால், காங்கிரஸ் மேலிடத்தை மிரட்ட அஹிந்தா என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்துகிறார். பிற்படுத்தப்பட்ட சமூக ஓட்டுகள், தங்கள் கையை நழுவ கூடாது என்று, காங்கிரஸ் மேலிடமும் பயந்து விடுகிறது. சிவகுமாருக்கு முதல்வர் பதவி கேட்டு, கடந்த மாதம் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் டில்லி சென்றனர். பதவிக்கு ஆபத்து வருவதை உணர்ந்த சித்தராமையா, அஹிந்தா அஸ்திரத்தை பயன்படுத்த துவக்கினார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மடாதிபதிகள், தலைவர்களை தனக்கு ஆதரவாக பேச வைத்தார். அஹிந்தா பிரம்மாஸ்திரத்தை வைத்து சித்தராமையா ஆட்டம் போடுவதால், அந்த அஸ்திரத்தை முறிக்க, சிவகுமார் புது சூழ்ச்சியை கையாள துவங்கி உள்ளார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த சில மடாதிபதிகளை, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'நான் முதல்வர் ஆக உங்கள் ஆதரவு தேவை' என்று கேட்டு கொண்டார். இதற்கு ஒப்பு கொண்ட மடாதிபதிகள், 'உங்கள் தலைமையில் பெங்களூரில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான மாநாடு நடத்தி, பலத்தை காட்டுங் கள். எங்கள் சமூகங்களுக்கு கல்வி, அரசியல்ரீதியாக சக்தி கிடைக்க நடவடிக்கை எடுங்கள்' என்று உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு சிவகுமாரும் இசைந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின் ஈடிகா சமூக மடாதிபதி பிரணவானந்த சுவாமி கூறுகையில், ''மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க சிவகுமார் தகுதியான நபர். ' 'அவரை முதல்வராக நியமிப்பதில் காங்கிரஸ் மேலிடம் தாமதம் செய்ய கூடாது. அவருக்கு எங்கள் ஆதரவு உள்ளது. ' 'அவர் கட்சிக்காக சிறைக்கு சென்று உள்ளார். சித்தராமையாவும் நல்ல தலைவர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை