மலை பிரதேச மக்களுக்கான சுகாதார மையமாக மாறும் ஷிவமொக்கா; : அமைச்சர்கள் அறிவிப்பு
பெங்களூரு : ''மலை பிரதேச மக்களுக்கு வசதியாக, ஷிவமொக்காவில் உள்ள சிம்ஸ் மற்றம் மேகன் மருத்துவமனைகள் முக்கிய சுகாதார மையமாக மேம்படுத்தப்படும்,'' என மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார். பெங்களூரு விகாஸ் சவுதாவில், மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர், துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது: சிம்ஸ் எனும் ஷிவமொக்கா மருத்துவ அறிவியல் நிறுவனம், மேகன் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு அதிகரித்து, சுகாதார மையமாக மேம்படுத்தப்படும். இம்மையம், மருத்துவ கல்லுாரிகள், சூப்பர் - ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உட்பட மருத்துவ நிறுவனங்களின் தொகுப்பை கொண்டிருக்கும். இது இம்மாவட்டத்தை மட்டுமின்றி, சுற்றி உள்ள மாவட்ட மக்களின் சுகாதார தேவையை பூர்த்தி செய்யும். ஷிவமொக்காவில் ஏற்கனவே சிறந்த சாலை, ரயில், விமான இணைப்பு கொண்டிருப்பதால், ஷிவமொக்கா நகரம் மலை மாவட்டங்களின் சுகாதார மையமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் பேசியதாவது: கல்யாண கர்நாடகா பகுதிக்கான சுகாதார மையமாக கலபுரகி உருவாக்கப்பட்டது போன்று, மலை நாடு பகுதிக்கான மருத்துவ சேவை மையமாக ஷிவமொக்கா செயல்படும். ஷிம்ஸ் மற்றம் மேகன் மருத்துவமனைகளுக்கு ஷிவமொகாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களை சேர்ந்த 26 தாலுகாக்களில் இருந்தும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பணி நெருக்கடியின் கீழ் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இச்சுமையை குறைக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை அமைப்பதில் அதிக நிதி முதலீடு செய்வோம். உடனடியாக மேகன் மருத்துவமனைக்கு கூடுதலாக ஒரு எம்.ஆர்.ஐ., இயந்திரமும், ஒரு பிணவறை கட்டவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு பேசினார். ஷிவமொக்காவை மலை நாடுகளின் சுகாதார மையமாக மாற்றுவது குறித்து, துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் சரணபிரகாஷ் பாட்டீல், மது பங்காரப்பா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.