முதல்வர் பதவி விஷயத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே ஏற்பட்டுள்ள குஸ்தியால், காங்கிரஸ் மேலிடம் எரிச்சல் அடைந்துள்ளது. இருவரையும் டில்லிக்கு வரவழைத்து, பேச்சு நடத்த ஆலோசித்தது. மாநிலத்துக்குள்ளேயே குழப்பத்தை சரி செய்ய முடிவு செய்து, 'இரண்டு தலைவர்கள் மட்டும் தனியாக பேச்சு நடத்துங்கள். அவசியம் ஏற்பட்டால் டில்லிக்கு வாருங்கள்' என, கட்டளையிட்டது. இதன்படி சிவகுமாரும், சித்தராமையாவும் அவரவர் இல்லத்தில, சிற்றுண்டி சாப்பிட்டபடி ஆலோசனை நடத்தினர். சட்டசபையின் பெலகாவி கூட்டத்தொடர் முடியும் வரை, அமைதியாக இருக்கலாம். அதன்பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யலாம் என, தீர்மானித்ததால் குழப்பம் தற்காலிகமாக முடிந்தது. இதற்கிடையே மங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, காங்., தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் நேற்று வந்திருந்தார். அவரை முதல்வர் சித்தராமையா சந்தித்து, ஆலோசனை நடத்தினார். முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டு, மிச்சமுள்ள ஆட்சி காலத்தை நிறைவு செய்வது, முதல்வரின் விருப்பம். இதற்காக தன் ஆதரவாளர்கள் மூலமாக, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தார். மேலிடம் தெளிவான முடிவுக்கு வராததால், இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ராகுல் நெருக்கம் கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவர். அரசியல் ரீதியில் பல சிக்கலான நேரங்களில், முக்கியமான முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவர். இதனால், மங்களூரு வந்த வேணுகோபாலை வரவேற்க, பெருமளவில் தொண்டர்கள் குவிந்தனர். முதல்வரும், நேற்று காலையே மங்களூருக்கு சென்று, வேணுகோபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமாருடன், இரண்டு கட்டங்களாக நடந்த ஆலோசனை கூட்டங்களில் பேசப்பட்ட விஷயங்கள், தன்னிடம் சிவகுமார் கூறிய கருத்துகளை விவரித்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் 8ல், கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடத்தும் நோக்கில், முதல்வரும், துணை முதல்வரும் டில்லி செல்கின்றனர். அப்போது ராகுல், மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்து, மேலிடத்திடம் தகவல் தெரிவிக்கும்படி, வேணுகோபாலிடம், முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். அஹிந்தா சமூகம் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் தலைமையில், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் குழுவினரும் வேணுகோபாலை சந்தித்தனர். அப்போது, 'எந்த காரணத்தை கொண்டும், முதல்வரை மாற்றக்கூடாது. சித்தராமையா பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் செல்வாக்கு மிக்க தலைவர். அவரை பதவியில் இருந்து நீக்கினால், அஹிந்தா சமுதாயத்தினர், காங்கிரசை விட்டு விலகி செல்வர். முக்கியமான ஓட்டு வங்கியை கட்சி இழக்க நேரிடும். இது அடுத்த தேர்தலில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்' என, விளக்கியுள்ளனர். இவற்றை பொறுமையாக கேட்டு கொண்ட வேணுகோபால், மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். கட்சி மேலிடம் எடுக்கும் முக்கியமான முடிவுகளில், இவரது பங்களிப்பு அதிகம். அனைத்து மாநில காங்., தலைவர்களுடன் நல்லுறவில் உள்ளவர். எனவே இவர் மூலமாக, முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ள, சித்தராமையா முயற்சிப்பதாக கூறப்படுகிறது. சதீஷ் 'யு - டர்ன்' இதற்கிடையில், 'இதுவரை முதல்வர் மாற்றம் இல்லை' என கூறி வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தற்போது, 'யு - டர்ன்' அடித்துள்ளார். மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: சித்தராமையா முதல்வர் பதவியை விட்டுத்தருவது உறுதி. ஆனால், அது எப்போது நடக்கும் என்று கூற முடியாது. அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தாலும், என்றாவது ஒருநாள் பதவியை விட வேண்டும். அது எப்போது என்பதை மேலிடம்தான் முடிவு செய்யும். அந்த முடிவை முதல்வரும், துணை முதல்வரும் ஏற்பர். கட்சி மேலிடம் எந்த வகையில் குழப்பத்தை சரி செய்யும் என, எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கட்சியில் நல்ல சூழ்நிலை இருக்க வேண்டும் என்பது, தொண்டர்களின் விருப்பம். நானும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும் ஆலோசனை நடத்தினோம். ஆனால், தலித் முதல்வர் குறித்து பேசவில்லை. பரமேஸ்வர் மூத்த தலைவர். அவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஏற்கனவே சிற்றுண்டி ஆலோசனை கூட்டங்கள் மூலமாக, குழப்பங்கள் தீர்ந்துள்ளன. அவ்வப்போது அதே விஷயத்தை பேசி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.