ராணுவத்திற்கே பாராட்டு சொல்கிறார் சித்தராமையா
மைசூரு : ''பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் பணிக்கான பாராட்டு, ராணுவத்தினருக்கு தான் செல்ல வேண்டும். எந்த கட்சியினரும் சொந்தம் கொண்டாட கூடாது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் பணிக்கான பாராட்டு, ராணுவத்தினருக்கு தான் செல்ல வேண்டும். எந்த கட்சியினரும் சொந்தம் கொண்டாட கூடாது.கடந்த 1971 போருடன் இன்றைய சூழ்நிலையை ஒப்பிட்டு பேசமாட்டேன். அப்போதைய சூழ்நிலைக்கும், இப்போதைய சூழ்நிலைக்கும் வித்தியாசம் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றியோ அல்லது போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் பற்றி பேசமாட்டேன்.போர் நிறுத்தத்துக்கு முன்பு, அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தி, அறிவித்திருக்க வேண்டும். பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டும்.கர்நாடகாவில் மைசூரில் தற்போது உள்ள மூன்று குழந்தைகளை தவிர, எந்த பாகிஸ்தான் பிரஜையும் மாநிலத்தில் இல்லை. தந்தை பாகிஸ்தானை சேர்ந்தவர்; தாய் மைசூரை சேர்ந்தவர். எனவே, இவர்களின் குழந்தைகளை அனுப்புவதில் சில பிரச்னைகள் உள்ளன.அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் இதுவரை விவாதிக்கவில்லை. அமைச்சரவை மாற்றப்பட்டால் நானே உங்களுக்கு தெரிவிப்பேன். அதை பற்றியே ஏன் கேட்கிறீர்கள்?போர் அறிவிக்கப்பட்டதால், மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இவ்விழா நடக்கும் தேதி அறிவிக்கப்படும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய அரசு எங்கள் அரசு தான். இது அரசின் வெற்றி.இவ்வாறு அவர் கூறினார்.