அனுபவம் புதுமை சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் திரையுலகில் நுழைந்து, பிப்ரவரி 30 என்ற படத்தை இயக்குகிறார். சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டது. கதை குறித்து, இயக்குனர் பிரசாத் கூறுகையில், ''நான் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறேன். ஓய்வு நேரத்தில் கதை எழுதுவது, குறும்படம் இயக்குவது என் பழக்கம். அந்த பழக்கம் என்னை திரைப்பட இயக்குனராக்கி உள்ளது. ''ஐந்து நண்பர்கள் அறிமுகம் இல்லாத இடத்துக்கு செல்லும் போது, அவர்களுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்பாடுகிறது. தீய சக்திக்கு எதிராக எப்படி போராடுகின்றனர் என்பதே கதையாகும். சைக்கலாஜிகல் திரில்லிங் கதை கொண்டதாகும். மைசூரில் படப்பிடிப்பு நடந்துள்ளது,'' என்றார். கதைகளின் சங்கமம் திரைப்பட பத்திரிகையாளர் அப்ஜல், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள, நெனபுகள மாது மதுரா திரைப்பட டிரெய்லர், கடந்த வாரம் வெளியானது. கதை குறித்து, அவரிடம் கேட்ட போது, ''இத்திரைப்படம் நான்கு கதைகளின் சங்கமம். ஒரு கதை 25 நிமிடங்கள் இருக்கும். நான்கும் வெவ்வேறு கோணத்தில் நகரும். நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பார்க்கும் விஷயங்களை வைத்து திரைக்கதை பின்னி உள்ளேன். செவன் ராஜ் நாயகனாக நடிப்பதுடன், தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளார். இவருக்கு ஜோடியாக ரேகா ரமேஷ் நடிக்கிறார்,'' என்றார். மீண்டும் ரம்யா நடிகை ரம்யாவை திரையில் பார்த்து, பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சமீப நாட்களாக அவர் மீண்டும் நடிப்புக்கு திரும்புவதாக, தகவல் வெளியாகிறது. ராஜேந்திர சிங் பாபு இயக்கவுள்ள, ராணி சென்னபைரா தேவி திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'ரம்யாவுக்கு ஏதோ ஒரு படத்தில் நடிப்பதில், விருப்பம் இல்லை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ராணி சென்னபைரா தேவியும், அப்படிப்பட்ட கதைதான். இதில் அவரை நடிக்க வைக்க முயற்சிக்கிறோம்' என்றார். நண்பர்கள் உதவி ரூபேஷ் ஷெட்டி இயக்கி, நடித்த ஜெய் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி, வசூலை அள்ளுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில், இப்போதும் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது. இது குறித்து, அவர் கூறுகையில், ''மாநிலம் முழுதும் இத்திரைப்படம் நன்றாக ஓடுவது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பல படங்களில் நான் நடித்திருந்தாலும், இது என் இயக்கத்தில் தயாரான, முதல் திரைப்படமாகும். கன்னடம், துளு என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்டார் நடிகர்கள் சுதீப், ஸ்ரீமுரளி உட்பட பலர் எனக்கு பக்கபலமாக நின்றனர். என் நண்பர்களே தங்களின் செலவில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்து, மக்களை பார்க்கும்படி செய்தனர்,'' என்றார். ஒத்துழைப்பு சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை பவ்யா கவுடா. இவர் லேண்ட் லார்டு என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார். அவர் கூறுகையில், ''இதுவரை பல தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களில் நடித்த நான், திரைப்படத்தில் அறிமுகமாகிறேன். துனியா விஜய், ரசிதா ராமுடன் நடிக்கிறேன். ரசிதா ராம் லேடி சூப்பர்ஸ்டார். படப்பிடிப்பில் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஷாட் முடிந்தவுடன், என்னை அருகில் அமர்த்தி கொண்டு, நிறைய விஷயங்களை கற்று கொடுத்தார். படம் திரைக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,'' என்றார். புதிய கதாநாயகன் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் பிரதாப் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இவனே சீனிவாசா திரைப்பட டீசர், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து, இயக்குனர் குமார் கூறுகையில், ''படத்துக்கு நானே கதை, திரைக்கதை, உரையாடல் எழுதி, இயக்கி உள்ளேன். ''சோஷியல் மீடியாவால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை, படத்தில் காண்பித்து உள்ளோம். நாயகியாக பிரியா ஆராத்யா நடித்துள்ளார். பெங்களூரு, மைசூரு, கோலார், துமகூரு சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம்,'' என்றார்.