உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு பிரசாரம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவிப்பு

 எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு பிரசாரம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவிப்பு

ஷிவமொக்கா: ''எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து, வரும், 25, 26ம் தேதிகளில் மாநிலம் முழுதும் பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்,'' என, மாநில தலைவர் விஜயேந்திரா கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து, பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கும். இது, மாநிலம் முழுதும் வரும் 25, 26ம் தேதிகளில் சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும். இதில், பா.ஜ., - எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் என அனைவரும் பங்கேற்பர். இந்த பிரசாரத்தின் மூலம் எஸ்.ஐ.ஆர்., குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படும். வாக்காளர் பட்டியலிலிருந்து தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும் குறைந்தபட்சம், 20 வீடுகளுக்காவது சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழைப்பொழிவு பற்றாக்குறையால் பல மாவட்டங்கள் வறட்சியில் உள்ளன. இதை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் காணொளி காட்சியின் மூலமாக பார்வையிடுகின்றனர். அமைச்சர்கள் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்யவோ அல்லது விவசாயிகளின் குறைகளை கேட்கவோ இல்லை. மாறாக, டில்லிக்கு பயணம் செல்வதிலேயே குறியாக உள்ளனர். முதல்வர் சிவகுமார் ரியல் எஸ்டேட் விஷயங்களில் அதிக அக்கறை காட்டுகிறார். அவர் விவசாயிகள் மீது அக்கறை காண்பிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஹூப்பள்ளியில் வேலை கோரி போராட்டம் நடத்தினர். அப்போது, காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள இடம் சிவகுமாரின் சொந்த ஊரான கனகபுராவிற்கு அருகில் உள்ளது. சிவகுமார் கனகபுராவுக்கு மட்டும் முதல்வர் கிடையாது. இந்த கர்நாடகாவுக்கே முதல்வர். எனவே, ரியல் எஸ்டேட் எண்ணங்களிலிருந்து விடுபட்டு மாநில நலனில் அக்கறை செலுத்த வேண்டும். 'கிரஹலட்சுமி' திட்டத்தில் புதிய விதிமுறைகள் என்பது பித்தலாட்டம். பணம் செலுத்தாமல் இருப்பதை தவிர்க்க மாநில அரசு மேற்கொள்ளும் புதிய நாடகமாகும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !