உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மேலே உள்ள கடவுள் இறங்கி வந்தாலும் பெங்களூரை மாற்ற முடியாது: சிவகுமார்

மேலே உள்ள கடவுள் இறங்கி வந்தாலும் பெங்களூரை மாற்ற முடியாது: சிவகுமார்

பெங்களூரு: பெங்களூரு நகரில் சாலை, நடைபாதையை மேம்படுத்துவது தொடர்பாக, மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி முகாம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைத்து பேசியதாவது:எதிர்காலத்தில் பெங்களூரு சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். இதற்காக நாம் இப்போது இருந்தே திட்டமிட வேண்டும். இல்லாவிட்டால், நகரை நாம் ஏமாற்றியது போன்று ஆகிவிடும். சாலை, நடைபாதை, பசுமை மண்டலங்களில் சீரான தன்மை அறியப்பட வேண்டும். மேலே உள்ள கடவுள் இறங்கி வந்தாலும், பெங்களூரை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக மாற்ற முடியாது. ஆனால் திட்டங்களை முறையாக வடிவமைத்து செயல்படுத்தினால் அனைத்தும் சாத்தியம்.

மரக்கன்றுகள்

சாலையோர மரக்கன்றுகள் அதிகம் நட வேண்டும். பிரதான சாலை எப்படி இருக்க வேண்டும்; வார்டு சாலை எப்படி இருக்க வேண்டும்; நடைபாதைகளை எப்படி பராமரிப்பது; சாலையில் நடக்கும்போது முறையாக எப்படி நடந்து செல்வது; மெட்ரோ துாண்கள், ரவுண்டாக்களை எப்படி அழகுபடுத்துவது என்பது போன்ற புதிய யோசனைகளை இங்கு கூறலாம்.சாலையில் வெளியே நீண்டு கொண்டு இருக்கும், கேபிள் கம்பிகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டு உள்ளேன். சுரங்கப்பாதை கட்டுமானத்தில் பல சவால்கள் உள்ளன. இன்னும் டெண்டருக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை. நிலம் கையகப்படுத்துதல், நிதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. புதிய மெட்ரோ பாதையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்து உள்ளோம். முன்பு, இது சாத்தியம் இல்லாமல் இருந்தது.நகரில் 1,700 கி.மீ.,க்கு ஒயிட் டாப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீடிக்கும். சாக்கடை கால்வாய் அருகே புதிய சாலை அமைப்பது, புதிதாக மேம்பாலம் கட்டுவது என அரசு முன்பு நிறைய திட்டம் உள்ளது.

புதிய யோசனை

நான் பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின், நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆர்வமாக செயல்படுகிறேன். புதிய யோசனைகள் வழங்க மாணவர்கள், இளைஞர்கள் முன்வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து பெங்களூரை வலிமையாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
பிப் 21, 2025 05:40

உள்ளே நுழைந்தால் வீடு உருப்படாது என்பார்கள் , அதே போல ப்ரோக்கர் உள்ளே நுழைந்தால் என்னாகும் என்பதற்கு கருநாடக சாட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை