காங்., - எம்.எல்.ஏ., குழந்தைக்கு தன் பெயரை வைத்த சிவகுமார்
பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகேந்திர கல்லப்பா தம்மண்ணவரின் ஆண் குழந்தைக்கு தனது பெயரை, துணை முதல்வர் சிவகுமார் வைத்துள்ளார். பெலகாவி குடச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகேந்திர கல்லப்பா தம்மண்ணவர், 47. இவரது மனைவி, சில தினங்களுக்கு முன்பு, ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இந்நிலையில் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில், துணை முதல்வர் சிவகுமாரை, தனது கைக்குழந்தையுடன், எம்.எல்.ஏ., நேற்று சந்தித்து ஆசி பெற்றார். 'என் மகனுக்கு உங்கள் பெயர் வைக்க ஆசைப்படுகிறேன்' என சிவகுமாரிடம், எம்.எல்.ஏ., கூறினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சிவகுமார், குழந்தையின் காதில் மூன்று முறை சிவகுமார் என்ற பெயரை கூறி வாழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படத்தை 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்ட சிவகுமார், 'குடச்சி எம்.எல்.ஏ., மகேந்திர கல்லப்பா தம்மண்ணவர் மகனுக்கு, சிவகுமார் என்று பெயர் வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதை வரமாக பார்க்கிறேன். இந்த அழகான குழந்தை வரும் நாட்களில், என்னை விட உயரமாக வளர்ந்து, பெற்றோருக்கு நல்ல பெயர் கொண்டு வர வாழ்த்துகிறேன்' என பதிவிட்டுள்ளார்.