இரு சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு
மங்களூரு: பன்ட்வால், மங்களூரில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில், பெங்களூரை சேர்ந்த மூவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவின், பி.சி.சாலை சதுக்கத்தில், நேற்று காலையில் இன்னோவா கார் வேகமாக சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த ரவி, 64, நஞ்சம்மா, 75, ரம்யா, 23, ஆகியோர் உயிரிழந்தனர். சுசிலா, கீர்த்தி குமார், கிரண், பிந்து, பிரசாந்த், ஓட்டுநர் சுப்பிரமணியா காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விபத்தில் இறந்தவர்கள், பெங்களூரின் பீன்யாவை சேர்ந்தவர்கள். தங்களின் உறவினர்களுடன், உடுப்பியின் கிருஷ்ணர் மடத்துக்கு காரில் சென்றபோது, விபத்து நடந்துள்ளது. பன்ட்வால் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.-- மங்களூரு நகரின், பனம்பூரில் தேசிய நெடுஞ்சாலை 66ல், சிக்னல் அருகில் நேற்று காலையில் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. ஒரு டேங்கர் பின்னால், ஆட்டோ நின்றிருந்தது. ஆட்டோவின் பின்னால் மற்றொரு டேங்கர் நின்றிருந்தது. இந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், ஆட்டோவில் இருந்த இரண்டு பயணியர், ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தனர். இவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. போலீசார் உடல்களை மீட்டு, விசாரணையை துவக்கி உள்ளனர்.