விடுமுறையை ரத்து செய்து பணிக்கு சென்ற ராணுவத்தினர்
பெங்களூரு: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியதால், விடுமுறையில் உள்ள ராணுவத்தினர் பணிக்கு திரும்புமாறு மத்திய உள்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.முன்னதாக ராணுவ வீரர்கள் பலரும் விடுமுறையை ரத்து செய்து, நாட்டை காக்கும் பணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.உத்தரகன்னடா மாவட்டம், சித்தாபுரா தாலுகாவை சேர்ந்த ஜெயந்த், 27, சி.ஆர்.பி.எப்.,பின் சத்தீஸ்கர் பெடாலியனில் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணம் நிச்சயமானதால், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மே 1ம் தேதி அவருக்கு திருமணம் நடந்தது. தேன் நிலவுக்காக புது மனைவியுடன் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தபோது, பணிக்கு திரும்பும்படி தலைமை அலுவலகத்தில் இருந்து, அழைப்பு வந்தது. எனவே தேன் நிலவை ரத்துசெய்துவிட்டு, பணிக்கு புறப்பட்டார்.நேற்று முன் தினம் அவரை ஊர் மக்கள் அவரை வாழ்த்தி வழி அனுப்பினர்.* கலபுரகி மாவட்டம், அப்சல்புரா தாலுகாவின், அர்ஜுனகி தான்டா கிராமத்தை சேர்ந்தவர் கன்னையா குமார். இவர் 20 ஆண்டுகளாக சி.ஆர்.பி.எப்.,பில் பணியாற்றுகிறார். தற்போது ஜம்மு - காஷ்மீரின், ஸ்ரீநகரில் பணியாற்றுகிறார்.இவரது தாயை பார்ப்பதற்காகவும், தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காகவும் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். உடனடியாக பணிக்கு திரும்பும்படி, டில்லியில் இருந்து உத்தரவு வந்ததால், நேற்று முன் தினம் கலபுரகி ரயில் நிலையத்தில் இருந்து, ஸ்ரீநகருக்கு புறப்பட்டார். கிராமத்தினர் வழி அனுப்பினர்.